ஹயக்ரீவ அவதாரம் என்பது ப்ராக்ருத ப்ரளயம் நடந்த பின் நடக்கும்
ஸ்ருஷ்டியின் போது நடந்தது. ப்ராக்ருத ப்ரளயம் என்பது எல்லா விதமான லோகங்களுமே அழிந்து மூலப்ரக்ருதி எம்பெருமானுக்குள்ளே போய் அசித்வத் ஜீவர்கள் எல்லாருமே எம்பெருமானுக்குள்ளே போகின்ற ஸ்திதி. அதற்குப் பின் பெருமாள் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் பொழுது ப்ரஹ்ம தேவனை ஸ்ருஷ்டி செய்து அவருக்கு வேதங்களை உபதேசிக்கின்றார் . அந்த வேதங்களை மதுகைடவர்கள் அபகரித்துவிடுகின்றனர். மதுகைடவர்களும் பெருமாளுடைய காது குரும்பையிலிருந்து தான் வருகிறார்கள். அதனால் அந்தச் சமயத்தில் வேறு ஸ்ருஷ்டி நடக்கவில்லை என்று தெரிகிறது. அந்த மாதிரி சமயத்தில் நடந்தது ஹயக்ரீவ அவதாரம்.
மற்றொரு விதமான ப்ரளயம், நைமித்திக்க ப்ரளயம் என்பதாகும். அதில் எல்லா லோகங்களும் அழியாது, சில லோகங்கள் பர்யந்த்ரம் தான் அந்த அழிவு நடக்கும். அதன் பின் அழிந்த லோகங்களின் சிருஷ்டி தொடரும். அந்த மாதிரி சமயங்களில் சதுர்யுகம் தோறும் நடக்கக்கூடிய தசாவதாரம் நடக்கும். அதில் ஒன்றுதான் மத்ஸ்ய அவதாரம். குறிப்பாக மத்ஸ்ய அவதாரம் என்பது பாகவதத்தில் எடுக்கும் பொழுது சாக்ஷஸ மன்வந்தரம் முடிந்து வைவஸ்வத மன்வந்தரம் ஆரம்பிக்கின்ற முன் என்று மஸ்த்ய அவதாரம் பற்றிய வர்ணனை இருக்கின்றது. அதில் அழிவு என்பது பூர்த்தியாக இருக்காது. சத்யவ்ரத பாண்டியன் ஏற்பாடு செய்த ஒரு பெரிய படகில் அந்த ப்ரளய காலம் முழுதும் ப்ரளய ஜலத்தில் நீந்தி அங்கு இருக்கும் ஔஷதிகள், ஸப்த ரிஷிகள் எல்லோரையும் காப்பாற்றி அடுத்த மன்வந்தரத்திற்கு வேண்டிய ஸாமகிரிகள் எல்லாவற்றையும் பாதுகாத்துக் கொடுக்கின்றார் பெருமாள். மேலும் அப்போது வேதங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு அடுத்த கால கட்டத்திற்கு போக வேண்டி எம்பெருமான் மத்ஸ்ய அவதாரம் எடுக்கிறார். அந்த வேதங்களை ஹயக்ரீவ அசுரன் திருடிக் கொண்டு போய்விடுகிறான். அவனை மத்ஸ்ய மூர்த்தி ஸம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு கொடுக்கின்றார். இது தான் கதை. அதனால் ஹயக்ரீவ அசுரன் ஹயக்ரீவ அவதாரம் இவை இரண்டும் வேறு வேறு கால கட்டத்தில் நடந்தவை என்று புரிந்துகொள்ளவேண்டும்.

