வெளியில் சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்கின்ற சங்கல்பத்தைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று எம்பெருமானிடம் ஶ்ரத்தையாக ப்ரார்த்திக்க வேண்டும். அப்படி ப்ரார்த்தித்தால் எம்பெருமான் கட்டாயம் அந்த தர்மத்தை ரக்ஷிப்பான்.
அதற்கு முதற்படியாக தாரணத்திற்கு வேண்டிய சில பதார்த்தங்களை நாமே பண்ணிக்கொள்ள அறிந்துகொண்டால் நல்லது. உயிர்தரிக்க என்ன உணவு வேண்டுமோ அதைப் பண்ணத்தெரிந்தால் உசிதம். கஞ்சி போடுவது, சாதம் வைப்பது இவை எல்லாம் சுலபமான காரியங்கள்தான். அதைப் பண்ண கற்றுக்கொள்ளலாம். தரிக்கவே முடியவில்லை, வேறுவழியே இல்லை, சாப்பிட்டே ஆகவேண்டும் என்கின்ற நேரத்தில்தான் வேறுவழியில்லாமல் வெளியில் சாப்பிட நேர்ந்தால் சாப்பிடலாம். அதுவும் முடிந்தவரை பால், மோர், பழங்கள் இவற்றுடன் சமாளிக்க முடிந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் உப்பு போட்ட பதார்த்தங்களைச் சாப்பிடாமல் சமாளிக்க பார்க்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் நிஷித்தமான பதார்த்தங்களை வெளியிலிருந்தும் சாப்பிடவே கூடாது.
இந்த மாதிரி சில விஷயங்களைக் கடைபிடித்து எம்பெருமானை மனதில் த்யானித்து கோவிந்த திருநாமத்தைச் சொல்லி எம்பெருமானே இப்படி நேர்ந்து விட்டதே! இப்படி நேராமல் நீரே பார்த்துக்கொள்ள வேண்டும், இந்த ஆசாரம் பங்கம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எம்பெருமானிடம் வேண்டிக்கொண்டு மனதில் பஶ்சாதாபத்துடன் தாரணத்திற்கு வேண்டியவரை மட்டும் சாப்பிட்டால் அதற்குப் பிறகு இந்த மாதிரி மேலும் நேராமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் வரும்.