ஆசார்யன் திருநாமத்தைச் சொல்வது அவர் திருமேனியை த்யானிப்பது இவை எல்லாம் மிகவும் உயர்ந்தது. மதுரகவியார் காண்பித்த பாதையின் படி தேவுமற்றறியேன் என்று ஆசார்யனையே நினைத்துக் கொண்டிருப்பது உயர்ந்தது தான். ஆனால் பெருமாளை த்யானம் பண்ண வேண்டும், திருமந்த்ரம் ஜபம் பண்ண வேண்டும் என்று சொல்லி இருக்கின்றது. அந்த த்யானத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசார்யன்தான் உபதேசிக்கின்றார். அதனால் ஆசார்யன் உபதேசித்த பகவத் த்யானத்தைப் பண்ணினால் ஆசார்யன் திருவுள்ளம் உகக்கும். ஆசார்யன் திருவுள்ளம் உகக்க பகவத் தியானமோ, நாம சங்கீர்த்தனமோ, பண்ணினால் அது மிகவும் உசத்தி. அதை எப்படிச் சொல்லி இருக்கிறார்களோ அந்த ரீதியில் பண்ண வேண்டும். எல்லாமே ஆசார்யன் காண்பித்த வழி. அவராலே ஏற்பட்டது என்கின்ற க்ருதக்ஞதைகளோடு இருந்துகொண்டு பண்ணினோமேயானால் அது மிகவும் உசிதமாக இருக்கும். பகவான் த்யானத்தையே தவிர்க்கணும், பகவன் நாமாவையே சொல்ல வேண்டாம் என்பது இல்லை, பகவன் நாமாவை சொன்னால், பகவன் த்யானம் பண்ணினால் ஆசார்யன் திருவுள்ளம் உகக்கும் என்று நினைத்துக் கொண்டு பண்ணுவது உசத்தியாக இருக்கும்.

