எம்பெருமானின் விஷ்ணு மற்றும் நாராயணன் இந்த இரண்டு திருநாமங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

எம்பெருமானின் விஷ்ணு மற்றும் நாராயணன் இந்த இரண்டு திருநாமங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் இந்த நாமங்களின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நாராயண ஶப்தத்திற்குப் பல விதமான அர்த்தங்களை விஸ்தாரமாக திருமந்த்ராதிகாரத்தில் ஸ்வாமி தேஶிகன் ஸாதித்திருக்கிறார். அதில் முக்கியமாக இரண்டு விதமாக அர்த்தங்கள் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம். முதலில்
“நாராணாம் அயனம்; நாரா: அயனம் யஸ்ய ஸ:” என்பது.
அதாவது பெருமாள் நாரங்களுக்கு (அழியாதவைகளின் கூட்டங்களுக்கு) இருப்பிடமாக இருக்கின்றான். அதேபோல் அந்த அழியாதவைகளின் கூட்டங்களைத் தனக்கு இருப்பிடமாக வைத்துக் கொண்டிருக்கிறான். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ரம் அழியக கூடியது, நரம் என்றால் அழியாதது. நாரங்கள் என்பது அழியாதவைகளின் கூட்டம். அந்த அழியாதவைகளின் கூட்டங்களுக்கு தான் இருப்பிடமாக ஆகின்றான் நாராயணன். அது தான் “நாராணாம் அயனம்”.
இதே அழியாதவைகளின் கூட்டங்களை (நாரா:) தனக்கு இருப்பிடமாக வைத்துக் கொண்டிருக்கிறான். அது தான் “நாரா: அயனம் யஸ்ய ஸ:” . ஆக எம்பெருமான் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக ஆகின்றான் என்பது இந்த நாராயண ஶப்தத்தில் இருந்து கிடைக்கின்றது.
விஷ்ணு என்கின்ற ஶப்தத்ததைப் பார்க்கும் பொழுது “சராசர பூதேஷு வேஷணாத் விஷ்ணு ருச்யதே”என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த சராசரங்கள் அனைத்திற்கும் எம்பெருமான் வியாபித்திருப்பவனாக இருக்கின்றான் என்று சொல்லலாம், அதாவது எல்லாவற்றிற்குள்ளும் வியாபத்திருக்கிறான் எம்பெருமான் என்று பொருள். இரண்டையும் பார்க்கும் பொழுது எம்பெருமான் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்று ஒரு பொதுவான அர்த்தம் கிடைக்கின்றது. ஆனால் இரண்டும் வெவ்வேறு குணங்களை காட்டுகின்றன என்பதை நம்மாழ்வார் திருவாய்மொழியின் இரண்டாம் பத்து ஏழாவது தசகத்தில் (கேஶவன் தமர்) சாதிக்கின்றார். எம்பெருமானுடைய த்வாதஶ நாமங்களைச் சொல்கின்றார். திருவாய்மொழியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு குணத்தைக் குறிக்கின்றது. அந்த குணங்கள் அனைத்தையும் ஸ்வாமி தேஶிகன் த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளியில் தொகுத்துத் தருகின்றார். ஒவ்வொரு பதிகத்தின் முடிவில் ஒவ்வொரு பாசுரமும் இந்த குணத்தைப் பாடுகின்றன என்று சொல்கின்றார். அப்படிச் சொல்லும் பொழுது இந்த நாராயண நாமத்தைச் சொல்லக்கூடிய பாசுரம் “நாரணன் மூவேழுலகுக்கும் நாதன் வேத மயம்” என்பதில் என்ன குணம் சொல்லப்பட்டிருக்கின்றது என்றால் ஸர்வ நாத: என்கின்ற குணம் சொல்லப்பட்டிருக்கிறது என்கின்றார். எம்பெருமான் எல்லோருக்கும் நாதனாக இருக்கிறார், ஏனென்றால் அவர் எல்லாவற்றிற்குள்ளும் , எல்லாவற்றையும் தனக்கு இருப்பிடமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் விஷ்ணு என்ற திருநாமத்தைக் கொண்ட பாசுரம் விட்டிலங்குசெஞ்சோதி. அதில் என்ன குணம் காட்டி இருக்கிறார் என்றால் “விஶ்வக் வ்யாப்தாதி வித்த:”. இந்த விஶ்வம் முழுவதும் எம்பெருமான் வியாபித்து விளங்கக் கூடியவனாக இருக்கின்றான் என்று பொருள் ஆகிறது. இதில் முக்கியமாக அடியார்களை தனக்கு இருப்பிடமாக கொண்டு அடியார்களுக்குள் வியாபித்திருக்கின்றார் என்று வ்யாக்யானங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் இந்தத் திருநாமம் விசேஷித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top