இந்த மாதிரி ஒரு நிலைமையில் எம்பெருமானை நாம் சிந்தனை பண்ணி இந்த வெளி விஷயங்கள் எல்லாம் நமது மனதைத் தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பகவானுடைய திருநாமங்களை ஜபிக்கின்றது, ப்ரபந்தங்கள்/ஸ்தோத்ரங்கள் சேவிப்பது, கோவிலுக்குச் செல்வது போன்ற விஷயங்கள் எல்லாம் பண்ணி மனதை அதில் லயிக்க வைக்க வேண்டும். மற்ற விஷங்கள் எதுவும் நம்மை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொள்ளவேண்டும். வைராக்கியம் உண்டாவதற்கு வைராக்ய பஞ்சக ஸ்லோகத்தை தினமும் சேவிக்கலாம். எம்பெருமான்தான் நமக்கு உறவு, எம்பெருமான் வைத்திருப்பதுதான் நமக்கு சொத்து, வேறு எதுவும் வேண்டியதில்லை என்று சொல்லக்கூடிய ஆஶ்சர்யமான சிறிய ஶ்லோகம் அது. தினமும் அதைச் சேவிக்கணும். அதே போல் நம்மை சேர்ந்தவர்கள் என்பதனால் அவர்களும் எம்பெருமானிடம் ஈடுபடவேண்டும், அனாவசியமான விஷயங்களில் எல்லாம் மனதைச் செலுத்தக்கூடாது என்றும், அவர்களுக்கு நல்ல புத்தி வந்து அசூயை எல்லாம் ஒழிந்து பெருமாளையே ஆஶ்ரயிக்கணும் என்று அவர்கள் சார்பாக எம்பெருமானிடத்தில் ப்ரார்த்தித்துக்கொள்ளலாம்.

