தீர்த்தமாடக்கூடிய விஷயங்கள்:
முதலில் ஏகாதசி அன்று அனைத்து ஸ்த்ரீகளும் தலைக்குத் தீர்த்தமாட வேண்டும்.
ரஜஸ்வலா காலம் முடிந்த பிறகு அதாவது மூன்று ராத்திரிகள் முடிந்த பிறகு நான்காம் நாள் காலையில் எல்லா ஸ்த்ரீகளும் அவசியம் தீர்த்தாமாட வேண்டும். திருமணமான ஸ்த்ரீகள் ஐந்தாம் நாள் காலையிலும் தீர்த்தாமாட வேண்டும். அதை அந்யா தீட்டுக் கழிப்பது என்று சொல்வார்கள். அதனால் ரஜஸ்வலா காலம் முடிந்த பிறகு நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் திருமணம் ஆன பெண்கள் அவசியம் தலைக்குத் தீர்த்தமாட வேண்டும்.
பர்தா தர்ப்பணம் செய்வாராகில் அன்றைய தினம் அவருடைய பார்யையானவள் கட்டாயம் தீர்த்தமாட வேண்டும். அமாவாஸை, மாசப்பிறப்பு, ஶ்ராத்தம் முதலிய தினங்களில் பர்தாவிற்குக் கைங்கர்யம் இருந்தால் அவருடைய மனைவி அவசியம் தலைக்குத் தீர்த்தமாட வேண்டும்.
க்ரஹண புண்ய காலங்களில் தீர்த்தமாடுதல் அவசியம் . புண்ய கால ஸ்நானம், சுத்த மண்டல ஸ்நானம் இவையெல்லாம் செய்ய வேண்டும். இவையெல்லாம் தீர்த்தமாடக்கூடிய விஷயங்கள்.
இதற்கு மேலே எண்ணெய் தேய்த்துக் குளித்தல், மங்கள ஸ்நானம் என்று ஒன்று இருக்கிறது. கன்னிகைகளும் சுமங்கலிகளும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் மிகவும் விசேஷம். அதேபோல் பண்டிகை நாட்களில், உதாஹரணத்திற்கு திருக்கார்த்திகை, கனு, காரடையான்நோன்பு, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமை, இந்த மாதிரி நாட்களிலெல்லாம் மங்கள ஸ்நானம் செய்தால் மிகவும் விசேஷம்.
தீர்த்தமாடக்கூடாத விஷயங்கள் :
இதில் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தீர்த்தமாடுவது என்பது எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் ஶிரோ ஸ்நானம் செய்து கொள்வது. அந்த மாதிரி வர்ஜிதமான நாட்கள் என்று ஒன்றும் தெரியவில்லை.
ஆனால் பித்ரு கார்யங்கள் செய்யக் கூடிய தினங்கள் அதாவது அமாவாஸை, மாசப்பிறப்பு, ஶ்ராத்தம் இது போன்ற தினங்களிலெல்லாம் தப்பித் தவறி கூட எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. பித்ரு கார்யங்கள் செய்ய நேர்ந்தால் அதாவது சில சமயங்களில் என்ன ஆகிவிடலாம் என்றால் ஒரு ஸ்த்ரீயிற்கு மாமனார் மாமியார் நன்றாக இருக்கலாம், அந்த ஸ்த்ரீயினுடைய பர்த்தா பித்ரு கார்யங்கள் அதாவது ஶ்ராத்தம் எல்லாம் பண்ணவில்லை, ஆனால் இந்த ஸ்த்ரீ மாமியாருக்கு ஒத்தாசையாக ஶ்ராத்த கார்யங்கள் பார்க்கிறாள் என்றால் அந்த ஶ்ராத்த தினத்தன்று அவள் தலைக்கு தீர்த்தமாடலாம். அதில் ஒன்றும் பாதகமில்லை. அதனால் பித்ரு தினங்களில் பித்ரு கார்யங்களில் கைங்கர்யம் பண்ண நேர்ந்ததேயானால் அவசியம் தலைக்குத் தீர்த்தமாடவேண்டும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எண்ணெய் தேய்த்து தீர்த்தாமாடக் கூடாது.