முதலில் அவர் சாதாரண வராஹம் கிடையாது, அவர் பெருமாள், மஹாவராஹன். “குஹனா போத்ரி” என்று ஸ்வாமி தேஶிகன் சாதிக்கிறார். சாதாரண வராஹன் போல் அல்லாமல் இவருடைய ஸாமர்த்யமே தனி.
ஸ்வாமி தேஶிகனே பூ ஸ்துதியில்
“வ்யோமாதிலங்கி4நி விபோ4: ப்ரளயாம்பு3ராஶௌ
வேஶந்தலேஶ இவ மாதுமஶக்யமூர்தே: |” என்று சாதிக்கிறார்.
அதாவது மஹாவராஹத்தின் பரிமாணம் எவ்வளவு பெரிது என்றால், அந்த ப்ரளய ஜலமானது ஒரு குட்டைபோல் ஆகிவிட்டது. ஆகையால் அவர் மூழ்க வேண்டும் என்ற அவசியமும் ஏற்பட்டிருக்குமோ என்றே தெரியவில்லை. அவர் மிகப்பெரிதான மூர்த்தியாய் இருந்தால் அநாயாஸமாய் பூமி தேவியைக் காப்பாற்றினார்.
ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு இருவரும் திதியின் பிள்ளைகள். அவ்விருவரும் சகோதரர்களே. ஏன் இரண்டு அவதாரம் என்றால், இவ்வுலகத்திற்கு இரண்டு விதமான அனுபவங்களைத் தரவேண்டியே. வராஹ அவதாரம் எடுத்து பிராட்டி மூலம் வராஹ புராணத்தையும், பல உபாயங்களையும், வராஹ சரம ஶ்லோத்தையும் சொல்வதற்காக ஒன்றும். அடுத்து பக்தர்களின் கூக்குரலுக்கு உடனே இரங்கி வந்து பக்த வாத்ஸல்யத்தைக் காட்ட ஒன்றும் என இரண்டு ரசமான லீலைகள் செய்து இரண்டு ப்ரதான குணங்களைப் பக்தர்களுக்குக் காட்ட எம்பெருமான் இரண்டு அவதாரங்களை எடுத்தார் என்று தோன்றுகிறது.