நமக்கு நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது நம் கர்மாதான். கர்மா என்றால் புண்ணிய பாபங்கள். புண்ணியத்தின் பலனாக நல்லது நடக்கும். பாபத்தின் பலனாக துக்கம் வரும்.
நமக்கு நல்லது நடக்கும்பொழுது, “என்னால்”/“நான்” சாதித்துக்கொண்டது என்று சொல்வது கூடாது. ஏனென்றால், பகவத் கீதையில் கண்ணன் கூறியபடி “மனுஷ்யன் தனிப்பட்ட முறையில் எதையுமே சாதிக்கமுடியாது. பெருமாளுடன் கூட இருந்துதான் அவன் எதையுமே சாதிக்க இயலும். அதனால் நான் சாதித்தேன் என்கின்ற அகம்பாவத்தை ஒழிக்க வேண்டும்”. மேலும் இது கீதையினுடைய அடிப்படை சித்தாந்தம்.
குறிப்புகள்
தேர் இழுப்பது போல் பெருமாளுடன் கூட இருந்துதான் நாம் காரியங்களைச் சாதிக்க முடியும். அதாவது, நான் தேர் இழுத்தேன் என்று சொல்வது எப்படி முட்டாள்தனமோ அது போல் தான், நான் சாதித்தது என்று சொல்வதும்.
சில சமயங்களில் நாம் ஒன்றும் செய்யாமலே பெருமாளினுடைய அனுக்ரஹத்தால் நமக்கு நல்லது நடக்கும்.அதுவும் கர்மாவினுடைய பலன் தான். நமக்கு தெரியாதபடியினால், அது பகவானுடைய அனுக்ரஹம் என்பதாக சொல்கிறோம். இதுவே துக்கம் வரும்போது பெருமாளினுடைய அனுக்ரஹம் என்று கூற முடியாது, ஏனென்றால் அவர் துக்கத்தை அனுக்ரஹம் செய்ய மாட்டார். நாம் பாபம் செய்த பலனை எம்பெருமான் வேறு வழியில்லாமல் நமக்கு கொடுக்கிறார்.