ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதன காலத்தில் திருமஞ்சனம் செய்யும் சமயம் புருஷ ஸுக்தம் சொல்ல வேண்டும் என்று ஆஹ்நிக க்ரந்தங்களில் சாதித்திருக்கிறார்கள். மேலும் திருமஞ்சன கட்டியம், ஶீக்ஷாவல்லீ போன்றவை சமயம் இருப்பின் சேவிக்கலாம். ப்ரதானமாக புருஷ ஸுக்தம் சேவிக்க வேண்டும் என்றிருக்கிறது.
ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹமாக இருந்தால் கட்டாயம் நித்ய திருவாராதனம் செய்தல் வேண்டும். அப்படிச் செய்யாவிடில் விக்ரஹத்தில் சான்நித்யம் குறையும், பெரிய அபச்சாரத்தில் போய் முடியும். ப்ரதிஷ்டை செய்யாத விக்ரஹமாக இருந்தால், பெரிய தோஷமில்லை.
சாளக்கிராமத்தைப் பொறுத்தவரை நித்யபடி செய்தால் தான் அது விசேஷம், மெல்ல செய்ய ஆரம்பித்தால் நலம். அமாவாஸை, ஏகாதசி, வெள்ளிக்கிழமை என விசேஷ நாட்களில் முதலில் ஆரம்பித்து பின் மெல்ல பழக்கத்தில் கொண்டு வர முடியும் என்று தோன்றுகிறது.
திருவாராதனம் பண்ணவே முடியவில்லை எனும் போது, மானசீக ஆராதனம் செய்யலாம். ஆனால் திருவாராதனம் செய்வது பெரிய கஷ்டமில்லை எனத் திருக்குடந்தை ஆண்டவன் சாதிப்பார், பெருமாளை ஏளச்செய்து திருமஞ்சனம் பண்ணி, அம்சை பண்ணாலே போதுமானது அதில் என்ன கஷ்டம் இருக்கின்றது.
பெருமாளைத் தொட்டு ஆராதனம் செய்ய ஓரளவு சுத்தமாக இருக்க வேண்டும்.முதல் நாள் உளர்த்தி அடுத்த நாள் உடுத்துவதற்கு தகுந்த இடம் பார்த்தால் நலம் அல்லது முதல் நாள் சால்வைக்கொண்டு (கம்பளி) அந்த வேஷ்டியை மடித்து வைத்து உடுத்தலாம்.
திருவாராதனம், சந்தியா வந்தனம் போன்ற முக்கியமான அநுஷ்டானங்களில் சோம்பேறித்தனத்தை தவிர்க்க வேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் சாதித்துள்ளார்,.