பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், திரௌபதி மகா விஶ்வாஸத்துடன் வஸ்த்ராபஹரணத்தின் சமயம் உதவிக்காக கூக்குரலிட்டு அழுதபோது அவளுக்கு வேண்டிய உதவியை தான் செய்யவில்லை என்னும் மன பாரத்துடன் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டதாக உத்தவனிடம் கூறியதை பெரியோர்களிடமும் உபன்யாஸங்களிலும் அடியேன் பலமுறை கேட்டிருக்கிறேன். அடியேனின் மிகப்பெரிய மற்றும் அதிருப்தியான சந்தேகம் என்னவென்றால், பெருமாள் அவளுக்குப் போதுமானதைச் செய்யவில்லை என்று மிகவும் அத்ருப்தியாக உணரும்போது, அவள் உதவிக்காக அழும் வரை அவன் ஏன் காத்திருக்க வேண்டும்? ஏன் காத்திருந்தார்?. பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தை பூங்காவில் விளையாடும்பொழுது கீழே விழுந்து அல்லது காயமடைவதைப் பார்க்கும்போது, விழுந்துவிடாமல் அல்லது காயமடையாமல் பாதுகாக்க அவர்களை நோக்கி விரைந்து செல்கிறோம் இல்லையா? “அம்மா, நான் கீழே விழுந்துவிட்டேன் ரத்தம் வருகிறது, தயவு செய்து என்னைக் காப்பாற்று?” என்று குழந்தைகள் கேட்பதற்காக நாம் காத்திருப்பதில்லையே. லௌகீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் நாமே நமது குழந்தைகள் மீது எந்த ஒரு எதிர்ப்பார்பும் இல்லாத அளவற்ற பாசம் வைத்திருக்கும்போது, ஜகன்மாதா மற்றும் ஜகத் பிதாவாக தாயாரும் பெருமாளும் ஏன் ஶரணாகதி செய்து கொள்ளவோ அல்லது உதவி கேட்கவோ காத்திருக்கிறார்கள்? பெருமாள் தாயாரையம், பெரியவர்ளையும் அவமதிக்கும்படியாக என்னுடைய இந்தக் கேள்வி இருந்தால் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

உலகத்தை சிருஷ்டித்து, ரக்ஷித்து மாதா பிதாக்களாக இருப்பது பெருமாளும், தாயாரும். சாதாரண மாதா பிதாக்கள் போல் அல்ல, அதில் அவர்கள் சில வ்யவஸ்தைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. உதாஹரணமாக, கர்மாதீனமாக தான் அவரவர்களுக்குப் பிறப்பும், சுகதுக்கங்களைக் கொடுப்பது என்று. ஒரே மாதா பிதாவாக ஆயினும் எல்லாரையும் ஒரே மாதிரி சுகமாகவே பிறக்க வைப்பதில்லை. ஒவ்வொருவரின் பிறப்பில், போகத்தில் எத்தனையோ வித்யாசங்கள் இருக்கின்றன. சிலர் பணக்காரனாக, ஏழையாக, ஆரோக்யமாக, புத்திசாலியாக பிறப்பதென அவரவர் கர்மாவிற்குயேற்றார் போல் பிறப்பு கொடுப்பது என்று ஒரு வ்யவஸ்த்தை வைத்துள்ளார்கள்.
அதே போல் தான் ரக்ஷணத்திலும் ஒரு வ்யவஸ்த்தை உண்டு, அவரவர் கர்மாவிற்கேற்றார் போல் ரக்ஷணம். ஶரணாகதி முதலான ரிதீயில் ப்ரார்தித்தால் ரக்ஷணம் அது இல்லாவிட்டால் ரக்ஷணம் இல்லையென்று “அப்ரார்தித்தோ ந கோபாயேத்” என சொல்கிறார்கள்.
இந்த வ்யவஸ்த்தை இல்லாவிட்டால் ஒரு ஜந்துவிற்கும் ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று ஆகிவிடும். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, அவரவர் கர்மாதீனமாக என்னவெல்லாம் உண்டோ அவையெல்லம் வரத்தான் வரும். அந்தக் கர்மத்தை மீறி பிழைத்துக்கொள்வதற்கு, செயல்படுவதற்கு சில ஶாஸ்த்ரங்கள் உண்டு. நம் அது மூலமாக தெரிந்துக்கொண்டு, கெட்டகார்யங்களைத் த்வரித்து, நல்ல கார்யங்களைச் செய்வது போன்றவை பண்ணலாம், ஶரணாகதி பண்ணலாம்.இவை செய்வதால் பகவான் ரக்ஷிகின்றான். அதை வைத்துக்கொண்டே அவன் ரக்ஷிப்பதினால் அவனை கருணாவான் என்கிறோம்.
இவையெல்லாம் சிருஷ்டி, ரக்ஷணம், மோக்ஷம் போன்றவற்றில் பகவான் செய்துகொண்ட வ்யவஸ்த்தை. இதை ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, மேலும் விஸ்தாரமாக அறிய தத்வமுக்தாகலாபம் முதலிய கர்ந்தங்களில் ஸேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top