1. ISKCON ஸம்ப்ரதாயத்தைக்கூட பாகவத ஸம்ப்ரதாயம் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் பகவானைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களின் நூல்களைப் படிப்பதினால் தவறு ஒன்றும் வந்து விடாது. அதே சமயம் நமது ஸம்ப்ரதாயத்தைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். அதனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைச் சரியாக தெரிந்து கொண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயம்,பகவத் ராமானுஜருடைய ஸம்ப்ரதாயத்தை நாம் பின்பற்ற வேண்டும்.
2. திருமண் ஸ்ரீசூரணத்தை U வடிவு முத்திரையில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடாது. நித்யமும் திருமண் இட்டுக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறது. பகவானின் திருநாமத்தைச் சொல்லி இடுவதால்தான் அதற்கு நாமம் என்று பெயர். எம்பெருமானின் திருநாமத்தைச் சொல்லி திருமண்ணைக் குழைத்து இடவேண்டும். முக்கியமாக அதில் மண் இருக்கவேண்டும் அதனால்தான் அதற்குத் திருமண் என்று பெயர். இவ்வாறு இட்டுக்கொண்டால்தான் அது நமக்கு ரக்ஷையாக இருக்கும் ஆகையால் திருமண்காப்பு என்று பெயர். இப்படியாக இட்டுக்கொள்ளுதல்தான் நலம் வேறு ரீதியில் பதித்துவைத்துக்கொண்டு இடுதல் கூடாது.
3. பொதுவாக மஞ்சள்தான் விசேஷம் என்பதாகச் சொல்லியிருக்கிறது. மஞ்சள் தூளிலிருந்துதான் தாயாரித்த ஸ்ரீசூர்ணம்தான் விசேஷம். ஒருவேளை மஞ்சள் கிடைக்கவில்லை என்றால், சிறு மஞ்சள்தூள் சேர்த்துவைத்து வேறு வர்ணத்துடன் கலந்து இட்டுக்கொள்ளலாம். ஆரஞ்சு போன்றவையெல்லாம் நவீன காலத்தில் வந்தது. ப்ராசீனத்தைப் பின்பற்றவேண்டுமானால் மஞ்சள் இடுவதுதான் சிறந்தது.
பல திருக்கோயில்களில் மஞ்சள்பொடி, மஞ்சள்காப்பு என்பவையெல்லாம் கிடைக்கும். அவற்றை சேகரித்துக்கொண்டு என்ன ஸ்ரீசூர்ணம் இருக்கிறதோ அத்துடன் சேர்த்து இட்டுக்கொள்ளலாம். இவ்வாறு சில மஹான்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்
4. கோபிசந்தனம் என்பது ஸ்ரீக்ருஷ்ணருடைய திருமேனிச் சம்பந்தம்பட்ட ஒரு த்ரவ்யம் என்பதாகச் சொல்கிறார்கள். திருமண்காப்பை பற்றி மண் எடுத்து இட்டுக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் சொல்லியிருக்கிறது. திருமண் கிடைக்காதபோது கோபி சந்தனம் இட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. திருமண் கிடைக்கின்றபோது கோபி சந்தனத்தைக் காட்டிலும் திருமண்காப்புதான் விசேஷம். ஏனென்றால் அது வெள்ளை நிறத்தில் இருக்கவேண்டுமென்பதும், மண் இருத்தல் வேண்டுமென்பதும் சொல்லியிருக்கு. அதுவே சம்ப்ரதாயமாகவும் இருப்பதினால் திருமண்காப்பே விசேஷமாகும்.
5. திவ்ய தேசத்திலோ அல்லது கங்காநதி முதலான இடங்களில் இருக்கின்ற திருமண்ணைதான் இடவேண்டும் என்று ஆகமங்களில் சொல்லியிருக்கு ஆகையால் அதைத்தான் தரிக்கவேண்டும். அயோத்யா, திருவஹீந்திரபுரம், புஷ்கரம், திருநாராயணபுரம் இவ்விடங்களில் திவ்யதேச திருமண் கிடைக்கின்றன. கடைகளில் இந்த க்ஷேத்ர திருமண் என்று கேட்டாலும் கொடுப்பார்கள். பொதுவிலே திருமண் என்று வெளியில் வைத்திருப்பார்கள் அவையல்லாது அயோத்யா அல்லது திருநாராயணபுரம் திருமண் என்று குறிப்பாக கேட்டால் தருவார்கள். அவையே விசேஷமானது.