எப்பொழுதாவது தவறோ அல்லது ஏதாவது அபாரதம் செய்தாலோ ப்ரபத்தி பலனில்லாததாகி அடியேனுக்கு ப்ரபத்தி கிட்டாது என்ற எண்ணம் எப்போதும் உண்டு. அப்படி இல்லை ப்ரபத்தி நிச்சயம் பலனைத் தரும் என்று பல மகான்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அடியேன் புரிந்து கொண்டிருப்பது சரியா என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அறியாமல் செய்யும் அபராதங்கள் ஒரு ப்ரபன்னனின் பாபக் கணக்கில் சேராது என்றும் , ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தால் அறிந்தே செய்கின்ற பாபங்களும் கழிந்து விடும் என்றும், இல்லை லகு சிக்ஷைக்கு பிறகு மோக்ஷம் கிட்டும் என்பது அடியேனுக்குத் தெரிந்திரிந்தும் அடியேன் ஏதாவது அபராதம் செய்தால் ப்ரபத்தி பலனில்லாமல் போய்விடும் என்கின்ற பயம் இருந்து கொண்டே இருக்கின்றது. ப்ராரப்த கர்மாவினால் அடியேனுக்கு இந்தப் பயம் ஏற்படுகின்றதா ? இந்தப் பயத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

எப்பொழுதாவது தவறோ அல்லது ஏதாவது அபாரதம் செய்தாலோ ப்ரபத்தி பலனில்லாததாகி அடியேனுக்கு ப்ரபத்தி கிட்டாது என்ற பயம் இருப்பது நல்லதுதான் அப்படியிருந்தால்தான் தப்புசெய்யாமல் இருக்க முடியும். மேலும் என்ன ஆனாலும் ப்ரபத்தி பண்ணியாகிவிட்டது அதன் பலன் கிடைத்துவிடும் என்ற பயமில்லாமல் இருத்தல்கூடாது. இவ்விஷயத்தில் பயத்தோடுதான் இருத்தல்வேண்டும். தப்பு பண்ணினால் கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்ற பயம்வேண்டும்.
ஆனால் ஶரணாகதி பலன் கொடுக்குமா என்ற பயம்வேண்டாம். அதை “நிர்பரோ நிர்பயோஸ்மி” ஸ்வாமி தேஶிகன் சொல்கிறார்.
நீங்கள் எதற்கு பயப்படவேண்டுமோ அதற்கு பயப்படாமல் எதற்கு வேண்டாமோ அதற்கு பயப்படுகிறீர்கள். ஶரணாகதி பற்றி கவலையேவேண்டாம். ஏனென்றால் ஶரணாகதி பண்ணிவிட்டால் பகவானிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டீர்கள் அதற்குப் பிறகு அது பலன் அளிக்குமா, பலன் அளிகாதா என்று பலர் கேட்கும் கேள்வியே தவறாகும்.
ஶரணாகதி என்றாலே நம்மையும் நம் ரக்ஷணப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டோம். ஒப்படைத்துவிட்டதற்கு அடையாளமே அதைப் பற்றி நாம் கவலையின்றி இருப்பதுதான். மீறி கவலைப்பட்டால் நாம் சரியாக ஒப்படைக்கவில்லை என்றே அர்த்தம்.
ஶரணாகதி பண்ணியவர்கள் அது இப்படியிருந்தால் பலன் கொடுக்குமா போன்ற சந்தேகத்துடன் கூடிய கேள்விகளைத் தவிர்த்தல் வேண்டும். ஶரணாகதி பண்ணிவிட்டால் நாம் நம்மை ஒப்படைத்து விட்டோம் அதற்கு மேல் பகவான் பார்த்துக்கொள்வான் என்று கவலையில்லாமல் இருத்தல்வேண்டும். நாம் எதை நினைத்து கவலைக்கொள்ளவேண்டும் என்றால், நாம் செய்யும் தவறுகள் பற்றி ஏனெனில் தப்பு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு.
ஆகையால் ஶரணாகதி பண்ணியவர்கள் பலன் கொடுக்காமல் போய்விடுமோ என்று எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், அது என்ன வேண்டுமானாலும் ஆகிவிட்டுப்போட்டும். நாம் மற்றொருவருடையது நினைத்து கவலைப்படமாட்டோம் அல்லவா அதுபோல்தான் இந்த ஆத்மா பகவானுடையது அதைப்பற்றி கவலைப்படாமல், தப்பு பண்ணினால் தண்டனை என்ற பயத்தோடு இருத்தல்வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top