ரஜஸ்வலை காலம் முடிந்த நான்காம் நாள் ஏதாவது ஒன்றை சாப்பிட்டுவிட்டுதான் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற வழக்கம் உலகத்தில் இருக்கிறது. இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் காரணம் இருக்கின்றது. பொதுவாக நான்காவது நாள் ஸ்நானம் செய்த அன்று ஸ்த்ரீகளுக்கு துணியை எல்லாம் நனைத்து உலர்த்தி என்று நிறைய காரியங்கள் இருக்கும். அந்தக் காரியங்களில் ஈடுபட்டு வயிற்றைப் பட்டினிபோட்டு விடக்கூடாது. ஏனென்றால் அந்தச் சமயத்தில் acidity நிறைய இருக்கும். அதனால் அது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு ஸம்ப்ரதாயமாக ஏதாவது ஒன்றை சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னே உள்ளே செல்லவேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் கருத்து.
ஆனால் ஒரு வசதிக்காக உப்பு மற்றும் அரிசி சாப்பிடுவது என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டு விட்டது. அதாவது உப்பான ஏதாவது ஒரு பதார்த்தம் சாப்பிட்டுவிட்டு மேலே வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் கருத்து. உப்பான பதார்த்தத்தைத் தளிகை பண்ணிச் சாப்பிடுவது என்பது காலை வேளையில் சிரமமாக இருக்கலாம். வேறு ஒருவர் பண்ணிக்கொடுத்து சாப்பிடும் படியாக இருந்திருக்கும். ஆனால் நடைமுறை வழக்கத்தில் கஷ்டமாக இருந்திருக்கலாம். அதனால் பச்சைப் பதார்த்தங்களான உப்பு மற்றும் அரிசியை சாப்பிடுவது என்று வழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். உப்பு மற்றும் அரிசிதான் சாப்பிட வேண்டும், அல்லது அரிசி மற்றும் புளிதான் சாப்பிட வேண்டும் என்கின்றதில்லை. அதனால் எந்தப் பச்சை ஆஹாரமாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டுவிட்டு காரியங்களைப் பார்க்கலாம். இன்று விஞ்ஞான ரீதியாக நாம் புரிந்து கொள்ளலாம். ஸம்ப்ரதாய ரீதியாக உப்பு மற்றும் அரிசியை சௌக்கியமாக வாயில் போட்டுக் கொண்டு வேலைகளை ஆரம்பிக்கலாம் என்பதனால் ஒரு வழக்கம் ஏற்பட்டுள்ளது.