பாதுகா ஆராதனம் தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன் a. நான் ஒவ்வொரு துவாதசியிலும் பாரணைக்கு முன் பாதுகா ஆராதனை செய்கிறேன். மற்றும் ஆசார்ய திருநக்ஷத்திரத்தில் நைவேத்யமாக பழங்கள் அல்லது கல்கண்டு மட்டுமே அம்ஸிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி இருக்கிறார்கள். கேசரி, பாயசம் போன்ற சமைத்த உணவுகளை ஏன் பாதுகைகளுக்கு அம்ஸிக்கக் கூடாது என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன். b.எனது ஆசார்யன் ப்ரக்ருதம் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர். ஆனால் நான் 45வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் பாதுகைகளை ஆராதனை செய்து கொண்டு வருகின்றேன். ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் பாதுகைகளையும் நான் பெற வேண்டுமா என்று பதில் அளிக்க ப்ரார்த்திக்கின்றேன் ? c.பாதுகா ஆராதனைக்கு என்று தனியாக தட்டுகள், வட்டில்கள் மற்றும் விளக்குகளை பயன்படுத்துகின்றேன். இவற்றை நான் பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை. [என்னிடம் ஒற்றைத் திருமணி மட்டுமே உள்ளது. அதை நான் பெருமாள் மற்றும் பாதுகா ஆராதனத்திற்கு உபயோகப்படுத்துகின்றேன். இது சரியா? இல்லை நான் பாதுகா ஆராதனத்திற்கு மற்றொரு திருமணி வாங்கி உபயோகப் படுத்த வேண்டுமா என்று தெளிவிக்க ப்ராத்திக்கின்றேன். d.ஏன் நாம் பாதுகா தீர்த்தத்தை முதலில் தெளித்துக்கொண்டு பின் ஸ்வீகரிக்கின்றோம்? மற்றும் பெருமாள் தீர்த்தத்தை முதலில் ஸ்வீகரித்து விட்டு பின் தலையில் தெளித்துக் கொள்கின்றோம்? e.பாதுகா ஆராதனம் பெருமாள் சந்நிதியில் இருந்து கொஞ்சம் தள்ளி பண்ணும் படி எனக்கு சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் பெருமாளை விட ஒருவனுடைய ஆசார்யனே அவனுக்கு மேல் என்று சொல்லி இருக்கும்போது ஏன் பாதுகா ஆராதனம் பெருமாள் ஆராதனத்துடன் சேர்ந்து பண்ணப் படுவதில்லை . மேலும் பாதுகாவிற்கு ஏன் துளசி சேர்க்கக் கூடாது? f. வரும் அக்டோபரில் அமெரிக்காவில் சூர்ய க்ரஹணம் ஏற்படுகிறது. சூர்ய கிரகணத்தின் போது பெருமாள் ஆராதனை (ஜபம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் தர்ப்பணம் ஆகியவற்றுடன்) செய்யப் போகின்றேன். பாதுகைகளுக்குத் திருமஞ்சனம் க்ரஹணத்தின் போது செய்ய வேண்டுமா அல்லது கிரகணத்திற்குப் பிறகு செய்ய வேண்டுமா என்பதை தெளிவிக்கப் ப்ரார்த்திக்கின்றேன் ?

a. பாதுகைக்கு அம்சை பண்ண பதார்தத்தை உள் பாத்திரங்களோடு சேர்க்கக்கூடாது. அதாவது தளிகை பண்ணும் பாத்திரங்கள் உட்பட பெருமாள் பாத்திரங்கள் என்று சில பாத்திரங்கள், நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள் என்று தனித்தனியாக வைத்திருப்போம். அதே போல் பாதுகா பாத்திரங்கள் தனி. அந்தப் பாதுகைக்கு உபயோகப்படுத்திய பாத்திரங்கள், அவற்றிற்கு ஸமர்ப்பித்த புஷ்பம், பழங்கள் என எதுவுமே பெருமாளுக்கு இருக்கும் பாத்திரங்களில் சேர்க்கக்கூடாது. ஆகையால் கேசரி முதலியவற்றை ஸமர்ப்பித்தால் அவைகளை உள்ளே சேர்க்க முடியாது என்பதாலும், பாதுகாராதனம் சுலபமாகப் பண்ணவேண்டியது என்பதாக ஸம்ப்ரதாயத்தில் வசனங்கள் இருக்கிறதாலும் இருப்பதைச் செய்தால் போதுமானதாகும். கேசரி முதலியவை பண்ணால்தான் விசேஷம் என்பதல்ல, நம் ஸம்ப்ரதாயத்தில் கூறியிருக்கும்படிச் செய்வதே விசேஷமாகும்.
b. முடியுமானால் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கரின் பாதுகைகளை ஏளப்பண்ணி ஆராதிக்கலாம். கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தமில்லை. பக்தியோடு செய்தாலே விசேஷமாகும்.
c. பெருமாளுடைய திருமணியை பாதுகைக்கு உபயோகப்படுத்துவது சரியில்லை. பாதுகாராதனத்திற்குத் தனியாக ப்ரதிஷ்டை ஆகாத திருமணியாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாதுகைக்குத் திருமணி ஸமர்ப்பிக்கவேண்டும் என்ற நிரபந்தம் கிடையாது. ஸமர்ப்பித்தால் விசேஷம்.
d. நாம் ஏன் பாதுகா தீர்த்தத்தை முதலில் தெளித்துக்கொண்டு பின் ஸ்வீகரிக்கின்றோம் மற்றும் பெருமாள் தீர்த்தத்தை முதலில் ஸ்வீகரித்து விட்டு பின் தலையில் தெளித்துக் கொள்கின்றோம் என்றால் இரண்டும் வெவ்வேறு அதன் வித்யாசத்தைக் காட்டுவதற்காக இப்படி ஒரு வழக்கம். இரண்டு தீர்த்தமும் விசேஷம் தான்.
e. பெருமாளை நமக்குச் சேர்த்து வைக்கிறபடியினாலே ஆசார்யன் உயர்ந்தவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பெருமாளைக் காட்டிலும் உயர்ந்தவர் என்ற அர்த்தமில்லை ஏனென்றால் அவர் பெருமாளுக்கு தாசர், மேலும் எம்பெருமான்தான் ஸர்வ பேருக்கும் ஸ்வாமி, அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் கிடையாது. ஆசார்யன் பெருமாளுக்கு ஸ்வாமி என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. நமக்கு அவர் பெருமாளையே சேர்த்து வைப்பதால் உயர்ந்தவர் என்று சொல்கிறோம். ஆசார்யன் எப்போதுமே எம்பெருமானுக்கு தாசர் ஆகையால் அவர் திருப்பாதுகைகளை பெருமாளுக்குக் கீழ்தான் ஏளப்பண்ணவேண்டும்.
துளசி என்பது பெருமாளுக்கு மட்டுமே உரியது அதை வேறு யாருக்கும் ஸமர்ப்பிக்கக்கூடாது. கால்களில் படக்கூடாது ஆகையால் பாதுகைக்கு ஸமர்ப்பிக்கக்கூடாது. அவர் நித்யஸூரி, பெருமாளுக்குச் சேவகம் பண்ணுபவர். நாம் அந்த நித்யஸூரிகளுக்கும் தாசர்களாவோம். ஆகையால் ஆசார்யனே ஆனாலும் அவருடைய திருவடிகளில் துளசி படக்கூடாது.
f. சூர்ய க்ரஹணத்தின்போது பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்யவேண்டிய அவசியமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top