ஒருவர் தன் சிறுவயதிலேயே ப்ரபத்தி செய்துவிட்டார். அதன் பின் அறிந்தும் அறியாமலும் அவர் பல பாபங்கள் செய்கிறார். அப்படியிருக்க அடியேன் புரிந்துகொண்டவரை அறியாமல் செய்த பாபங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் அவர் தெரிந்துச்செய்த பாபத்திற்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தால் தான் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படாது. அடியேனின் இந்தப் புரிதல் சரியா ஸ்வாமி? மேலும் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யாவிட்டால் என்ன ஆகும் ஸ்வாமி?

சிறு வயதிலேயே ப்ரபத்தி பண்ணிக்கொண்டு அதற்கு பிறகு நிறைய பாபங்கள் ஏற்பட்டு, அந்தப் பாபங்களில் தெரிந்து செய்கின்ற பாபங்களால் மோக்ஷம் தடைபடுமா என்றால் நிச்சயமாக தடைபடாது. ப்ரபத்தி பண்ணிக்கொண்டு விட்டால் அது அவசியம் மோக்ஷத்தை அளிக்கும்.
இரண்டே இரண்டு விஷயங்கள் தான் ஆபத்து தரக்கூடியது. ஒன்று தேவதாந்தர சம்பந்தம். மற்றொன்று பாகவத அபசாரம். இவை இரண்டையும் அவசியம் தவிர்க்கணும். இவை தவிர்த்தால் போதும் மீதி வேற பாபங்கள் என்ன ஏற்பட்டாலும் அது ப்ரபத்திக்கு பாதகமாக ஆகாது.
மேலும் தெரியாது செய்த பாபங்கள் ஒட்டாது. தெரிந்து செய்கின்ற பாபங்கள் அதாவது புத்திபூர்வ உத்ராகங்கள் எனச் சொல்லப்படும் பாபங்களுக்கெல்லாம் எம்பெருமான் லகு தண்டனை அளிப்பான். அந்தத் தண்டனை எல்லாம் அனுபவித்து முடித்த பிறகு ப்ரபத்தி நிச்சயம் பலிக்கும். இந்த லகு தண்டனை அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தால் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்ளலாம். அப்படி பண்ணிக்கொண்டால் இந்தப் பாபங்கள் எல்லாம் நீங்கி மோக்ஷத்தை அடையலாம். ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொண்டு தான் ஆகவேண்டும் என்கின்ற நிச்சயம் கிடையாது. ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணவில்லை என்றாலும் மோக்ஷார்த்த ப்ரபத்தி பண்ணியதால் மோக்ஷம் நிச்சயமாக கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top