ரஜஸ்வலை ஆகிவிட்டோம் என்று தெரிந்த சமயம்முதல், மூன்று ராத்ரி கழிந்து நான்காவது நாள் தலைக்குத் தீர்த்தமாடி விட்டு உள்ளே வரும்வரை ஸ்தோத்ர, ப்ரபந்த பாடங்கள் சேவிக்கும் வழக்கமில்லை.
ரஜஸ்வலை காலத்தில் பல விஷயங்கள் கடைபிடிக்கவும், தவிர்க்கவும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் இதில் காணலாம்.
ரஜஸ்வலை கண்டக்ஷணம் முதல் விலகவேண்டும் என்பது ஶாஸ்த்ரம். அப்படி விலகி மூன்று ராத்ரி வெளியில் இருக்கவேண்டும். நான்காவது நாள் காலை தலைக்குத் தீர்த்தமாடிவிட்டு உள்ளே வரவேண்டும்.
இந்த மூன்றுநாள் தனியே என்பது, குறைந்தபக்ஷம் ஆறடி தூரத்தில் அகத்தில் இருப்பவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.
அந்த மூன்றுநாளும், அந்த ஸ்த்ரீ உபயோகிக்கும் பாத்திரங்களும், தூணிகளும் தனியே வைத்துக்கொள்ள வேண்டும். அவைகளை நான்காவது நாள் குளிக்கும்போது நனைத்து உலர்த்த வேண்டும். அடுத்தமுறை உபயோகிக்கத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கல்யாணம் ஆன பெண்மனி நான்காவது நாள் எல்லா கார்யம் பண்ண யோக்யதை உடையவளாய் இருக்கமாட்டாள். அன்றைக்கும் விழுப்பு போலேதான் அவள் நடந்துகொள்ள வேண்டும். பெருமாள் விளக்கேற்றுவது, உள்தொடுவது வழக்கமில்லை. அகத்து பெரியவர்கள் அன்று அவள் தொட்டுச் சாப்பிட மாட்டார்கள்.
ஒருவேளை குழந்தைகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்றால்,அவர்களுக்குப் பண்ணி போடலாம், பாதகமில்லை.
ஐந்தாவது நாள் அந்யாதீட்டு குளித்தபின் எல்லாக் கார்யம் பண்ணும் யோகியதையை அவள் பெற்றுவிடுகிறாள்.
ரஜஸ்வலை ஒருகால் 5நாளுக்கு மேலும் நீடித்தால், விலகவேண்டிய அவசியமில்லை. 15 நாள் வரை பொதுவாக விலக அவசியமில்லை. 15நாளுக்கு மேல் விழுப்புக் கணக்கு, 18 நாளுக்கு மேல் வெளியே உட்கார வேண்டும்.
இதுவே பெரியவர்கள் நிர்வகித்த ஶாஸ்த்ரமாகும்.