த்ருஷ்டி சுற்றிப் போடுவது என்பது கோவில்களில் பெருமாளுக்கு இருக்கின்ற ஒரு வழக்கம் தான். பெருமாள் புறப்பாடு முடிந்து திரும்பியபின் அவருக்கு த்ருஷ்டி கழித்தபின் உள்ளே ஏளப் பண்ணுவது வழக்கமாக இருக்கின்றது. இன்றும் பல கோவில்களில் சேவிக்கலாம். அதே போல் க்ருஹங்களில் பெரியோர்கள் எல்லாம் சின்னவார்களுக்கு த்ருஷ்டி கழிப்பது வழக்கத்தில் இருக்கிறது. கற்பூரம் சுற்றிப் போடுவது, உப்பு மிளகு சுற்றிப் போடுவது என்று பெரியோர்கள் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஒரு ப்ரபந்நனுக்கு த்ருஷ்டி தோஷம் வந்துவிடும் என்கின்ற பயம் தேவை இல்லை. எம்பெருமான் காப்பான் என்கின்ற மஹாவிஶ்வாசம் கட்டாயம் இருக்கவேண்டும். இப்படி த்ருஷ்டி கழிப்பது என்கின்ற விஷயத்தை எம்பெருமான் நம்மை காப்பான் என்று நமக்கு இருக்கும் விஶ்வாசத்தை ஞாபகப் படுத்திக் கொள்வதற்காகத்தான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெரியோர்கள் வழக்கத்தில் அதை த்ருஷ்டி கழிப்பதற்கு என்று வைத்துக்கொள்ளாமல் எம்பெருமான் நம்மைக் காத்தருள்வான் என்கின்ற நம்பிக்கையை கூட்டிக் கொள்வதற்கான ஒரு காரியமாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றே தோன்றுகிறது.