பித்ரு தோஷம் என்று ஜாதகத்தில் காண்பித்துக் கொடுப்பதாக சொல்கிறார்கள். பித்ரு கார்யங்களை அதாவது ஶ்ரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளை, நாமோ அல்லது நம் முன்னோர்கள் சரியாகப் பண்ணவில்லை என்றாலோ, துர்மரணம் முதலானது எல்லாம் வரும் போதோ, அந்தப் பித்ருக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. எப்போதுமே நாம் செய்யும் ஶ்ரார்த்தாதிகளினால்தான் அவர்களுக்கு த்ருப்தி வரவேண்டும். அதனால் பித்ருக்களுடைய அதிருப்தியானது குடும்பத்தை நேராக பாதிக்கின்றது. அதனால் குழந்தைகள் பிறக்காமல் இருத்தலோ, குழந்தைகளுக்கு தோஷம் இருத்தலோ காண்பிக்கிறது. ஜாதகத்திலும் காண்பிக்ககிறது என்பதாகச் சொல்வார்கள். இப்படி ஒன்று ஶாஸ்த்ரத்தில் இருப்பது வாஸ்தவம்.
ஶரணாகதி பண்ணியவர்கள், அதிலும் குறிப்பாக தவறாமல் ஶ்ரார்த்தம் தர்ப்பணம் எல்லாம் சரியாகப் பண்ணுபவர்கள் இந்தப் பித்ரு தோஷத்தை பற்றி பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. பெருமாள் இருக்கின்றார், அவர் பார்த்துக் கொள்வார். அதனால் ப்ரச்சினை ஒன்றும் இருக்காது. குடும்பத்தில் இன்னும் பெரிய அளவில் பாதிப்பு என்று இருந்தால் நம் ஸ்ரீ வைஷ்ணவ பாதிக்காத ரீதியில் நாம் ஏதாவது பரிகாரம் பண்ணலாம். இராமேஸ்வரம் போய் தர்ப்பணம் செய்வது என்று சொல்வதெல்லாம் நம் பெரியோர்கள் யாரும் செய்வது கிடையாது. வேறு ரீதியில் நாம் ஏதாவது பண்ணலாம்.