கல்யாணம் ஆகாத ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் காலையில் எழுந்தவுடன் ஹரிநாம ஸ்மரணை செய்யவேண்டும். அதன்பின் ஶரீர சுத்தி செய்துவிட்டு, தலைவாரிப்பின்னி, நெற்றியிட்டு, வளையெல்லாம் போட்டுக்கொண்டு, பெருமாள் சந்நிதியில் சேவித்துவிட்டு ஆசார்யன் தனியன்களைச் சொல்லி, தெரிந்த ஸ்தோத்ர பாடங்கள், ப்ரபந்தங்கள் முதலியவற்றைச் சேவிக்கலாம். இதே போல் சாயங்காலம் விளக்கேற்றிய பின்னரும் செய்யலாம்
புதியதாக இயன்றளவு ஸ்தோத்ர பாடங்கள் கற்றுக்கொள்வது, உபந்யாஸங்கள் கேட்பது என்று சத்விஷ்யங்களில் ருசியை வளர்த்துக்கொள்ளலாம்.
பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதென்பது கல்யாணமாகாத பெண்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. அகத்து பெரியவர்கள் என்ன ஒத்தாசை கேட்டாலும் அதை அவர்களுக்கு அனுகுணமாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமான குணம். இக்குணத்தை வளர்த்துக் கொண்டால்தான் கல்யாணமான பிறகு புக்கத்திலும் அனுசரனையாக நடந்து, க்ருஹஸ்த தர்மங்களையெல்லாம் பரிபாலித்துக் கொண்டும், ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கும் உபயுக்தமாக இருக்கும்.
கல்யாணம் ஆன பிறகு ஆசார்யன் மாறக்கூடும் என்பதால், திருமணத்திற்கு முன்னர் ஸமாஶ்ரயணம் செய்யும் வழக்கமில்லை என்று சிலர் வைத்துக்கொண்டுள்ளனர்.
ஒருகால் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் ஆசார்யன் உபதேசித்த மந்திரத்தை தினமும் ஜபிக்கவேண்டும்.
ஸ்ரீவைஷ்ணவராக ஆகவேண்டும் என்ற எண்ணம் வந்ததே எம்பெருமானின் பேரனுக்ரஹம். ஒரு சதாசார்யன் கிடைக்கும்வரை, பொதுவாக எம்பெருமானின் திருநாமங்களையே அண்டி வாழலாம். எழும்போது ஹரி நாமம், குளிக்கும்போது புண்டரிகாக்ஷ திருநாமம், உண்ணும்போது கோவிந்த திருநாமம், வெளியில் செல்லும்போது கேசவ திருநாமம், உறங்கும்போது மாதவ திருநாமம் என்று ஸ்மரித்துக்கொண்டு இருந்தாலே எம்பெருமான் மேல் ஈடுபாடு குறையாமல் இருக்கும். பாடத்தெரிந்தால் எம்பெருமானின் பாடல்களைக் கற்றுக்கொண்டு பாடலாம். ஸ்தோத்ர பாடங்கள், ப்ரபந்தங்கள் போன்றவற்றைக் கற்கலாம். எம்பெருமானின் படத்தின் கீழ் கோலமிட்டு, விளக்கேற்றி, புஷ்பம் சாற்றி எம்பெருமானை நினைத்து வழிபடலாம். எம்பெருமான் விஷயமான உபந்யாஸங்கள் கேட்கலாம். விரைவில் சதாசார்யன் ஸம்பந்தம் கிட்டவேண்டும் என்ற ப்ரார்த்தனையை ஶ்ரத்தையாக எம்பெருமான் திருவடிகளில் வைத்து வழிபட அவன் வழிகாட்டுவான்.