பொதுவான ஸ்த்ரீ அநுஷ்டானங்கள் பற்றி சுதர்சனம் YouTube Channelல் “ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீயின் நித்யகர்மானுஷ்டானம்” என்று ஒரு வீடியோஇருக்கின்றது. அதைப் பார்த்துக்கொள்ளலாம்.
மாசப்பிறப்பு தளிகைக்கு, ஶ்ராத்தத்திற்கு என்னென்ன பதார்த்தங்கள் உபயோகிப்போமோ அதைக் கொண்டே மாசப்பிறப்பு தளிகை செய்யவேண்டும். அதாவது முக்கியமாக தவிர்க்க வேண்டியது என்பது துவரம் பருப்பு, மஞ்சள் பொடி இவயெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்று சில குடும்பத்து வழக்கம்.
இன்னும் சில குடும்பங்களில் மாசப்பிறப்பு என்பது கல்யாணதினம் போல் இருப்பதினால் நல்ல மங்களகராமாகத் தளிகைப் பண்ணுவது என்று வழக்கமாக உள்ளது. ஆகையால் அவரவர் அகத்து வழக்கப்படி கேட்டுச்செய்யவும்.
குறிப்புகள்:
மாசப்பிறப்பன்று நிஷித்தமான காய்கறிகள் எதையுமே பயன்படுத்தக்கூடாது. பொதுவாகவே பயன்படுத்தக்கூடாது, கட்டாயமாக மாசப்பிறப்பு அன்று பயன்படுத்தக் கூடாது.
மாசப்பிறப்பன்று ஶ்ராத்தத் தளிகைப்போல் பண்ணும் வழக்கம் இருந்தால், என்னென்ன சேர்த்துக் கொள்ளலாம் என்று கேட்டால் பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி, தேங்காய், வெல்லம். இதெல்லாம் பயன்படுத்தலாம். இதைக் கொண்டு தளிகை பண்ணவேண்டும் என்றால், பயத்தம்பருப்பை தனி பருப்பாக வைத்து விட்டு, பொரித்த குழம்பு பண்ணுவது வழக்கம். பொரித்த குழம்பு என்பது, உளுத்தம்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, இதெல்லாம் வறுத்து அரைத்து வாழைக்காயோ, சேப்பங்கிழங்கோ, சுண்டைக்காயோதான் போட்டுப்பண்ணும். அரைக்கும் பொது தேங்காயும் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் இதே பதார்த்தங்களை வறுத்து அரைத்து சாற்றமுது பண்ணலாம். கறியமுது என்பது பொதுவாக ஶ்ராத்தத்திற்கு எது உசிதமோ அதெல்லாம் மாசப்பிறப்பிற்குச் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காய், சேப்பங்கிழங்கு, பாகற்காய், இவை எல்லாம் மிகவும் உசிதமானவை. மஞ்சள் பொடி சேர்க்காமல் பண்ணுவது முக்கியம். திருக்கண்ணமுது அவசியம் பண்ணவேண்டும். வெல்லம் சேர்த்து திருக்கண்ணமுது செய்து எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கலாம்.