நூறு தடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன் என்று நாச்சியார் ஆசைப்பட்டார். கூடாரவல்லி பாசுரத்திலும் “பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார கூடியிருந்து குளிர்ந்து” என்று இருப்பதினால் பால்சோறு அதாவது அக்காரவடிசில் சமர்ப்பித்ததாக இருக்கின்றது. அதனால் நாச்சியார் ஆசைப்பட்டபடிதான் நாம் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீ பாஷ்யக்காரர் திருமாலிருஞ்சோலையில் சமர்ப்பித்ததாக ஐதிஹ்யம் இருக்கிறது. அதனால் அந்த ஒரு பாவத்தில் நாமும் சமர்ப்பிக்கிறோம்.
அக்கார வடிசலும் சர்க்கரைப் பொங்கலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நாம் செய்யும் விதத்தில் தான் வித்யாசம் இருக்கிறது. அக்காரம் என்றால் கரும்பிலிருந்து வரக்கூடிய சர்க்கரை அல்லது வெல்லம், வெல்லத்திற்குதான் முன்காலத்தில் சர்க்கரை என்று பெயர். அடிசில் என்றால் சாதம் என்று அர்த்தம். இதனால் வெல்லம் சேர்த்து செய்யும் சாதம், அக்காரவடிசில், அதுவே சர்க்கரைப் பொங்கல். இரண்டும் ஒன்றுதான்.