சங்கநாதம் என்பது விசேஷமான நாதம்தான். தென்னிந்திய திருக்கோயில்களில் ஒலிக்கக்கூடாது என்பதெல்லாம் இல்லை, சில கோயில்களில் இன்றும் சங்கநாதம் எழுப்புவது என்பது இருக்கிறது. குறிப்பாக கேரள திருக்கோயில்களில், பெருமாள் ஏளும்போதோ அல்லது பெருமாள் திருக்கோயில் திருக்கதவு திறக்கும்போதோ சங்கநாதம் எழுப்புவதுண்டு.
திருப்பாவையில் “தங்கள் திருக்கோவில் சங்கிடுவான் போதந்தார்”, “வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ” என்ற வரிகளுக்குச் சங்கநாதம் என்று ஓர் அர்த்தம் உண்டு. “சங்கிடுவான்” என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறுகிறார்கள். அதில் சங்கம் என்று ஒரு அர்த்தமுண்டு, “புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ” என்பதன் மூலம் கோயில்களில் சங்கநாதம் எழுப்பலாம் தவறொன்றுமில்லை.
ஆனால் சில கோயில்களில் ஏன் எழுப்பக்கூடாது என்றால், ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு ஸம்ப்ரதாயம் உண்டு. அப்படியிருக்க நாமாக சப்தங்கள் எல்லாம் எழுப்பக்கூடாது. சில கோயில்களில் சங்கநாதம் கூடாது என்று வைத்திருப்பார்கள். இப்படியாக அந்தந்தக் கோயில்களுக்கென்று ஒரு வழக்கமும் அதை செய்வதற்கேன்று சிலரும் இருப்பார்கள். ஆகையால் அந்தக் கோயில்களின் பழக்கவழக்கத்தை நாம் பின்பற்றி நடக்கவேண்டும்.