1. ஈர வஸ்த்ரம் என்பது சில அபரகாரியங்களுக்கு மட்டும் மடியாகும். அதாவது சில அபர காரியங்கள் செய்யும்போது மட்டும்தான் ஈர வஸ்த்ரம் உடுத்திக்கொள்வது வழக்கமாகும். பொதுவாக நன்றாக உலர்ந்த வஸ்த்ரம்தான் மடியானது. அப்படி உலரவில்லை என்றால் ஏழு முறை உதறிவிட்டு உடுத்திக் கொள்வது என்பது ஆபத்தில் சிலர் செய்யும் வழக்கமாக இருக்கிறது.
2. மடிவஸ்த்ரத்தைக் கொடியிலிருந்து ஒரு குச்சியைக் கொண்டு எடுப்பதுதான் சரியாக இருக்கும். ப்ளாஸ்டிக் கொடியில் உலர்த்துவது என்பது உத்தமகல்பமில்லை. மரக் கொடியிலோ அல்லது மூங்கில் கொடியிலோ உலர்த்துவதே உத்தமகல்பம். அது கிடைக்காத பக்ஷத்தில் மேலே உலர்த்த வேண்டும் என்கின்ற எண்ணம் முக்கியம். அதனால் ப்ளாஸ்டிக் கொடி பரவாயில்லை என்று வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
3. கொடியிலிருந்து மரக்குச்சியினால் எடுக்கும்பொழுது வஸ்த்ரம் கீழே விழுந்து விட்டால் கீழே விழுந்த இடம் சுத்தமாக இருந்தால் அந்த வஸ்த்ரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
4. பொதுவாக இரண்டு சூரியன் பார்த்த வஸ்த்ரத்தை உடுத்திக்கொள்வது அத்தனை ஶ்லாக்யமில்லை. ஒரு சூர்யன் பார்த்த வஸ்த்ரம் உத்திக்கொள்வதுதான் வேண்டியது மிகவும் உத்தம கல்பமான ஆசாரம் என்று சொல்லலாம். குறிப்பாக ஶ்ராத்தம் முதலிய விசேஷதினங்களில் இரண்டு சூரியன் பார்க்காமல்தான் வைத்துக் கொள்ளவேண்டும் ஆகையால்தான் பெரியவர்கள் முதல்நாள் சூர்ய அஸ்தமனமான பின்னர் ஶ்ராத்ததிற்கான மடி வஸ்த்ரத்தை உலர்த்துவார்கள். ஒரு சூரியன் பார்த்த வஸ்த்ரத்தைதான் அன்று உடுத்திக்கொள்ள வேண்டும்.
அனுதினமும் ஒரு சூர்யன்பார்த்த வஸ்த்ரம் உடுத்திக்கொள்வது உத்தம கல்பம். தினமும் அப்படிச் செய்ய முடியவில்லை எனில் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
5. காலை சந்தியாவந்தனம் மற்றும் திருவாராதனம் எல்லாம் செய்யும் பொழுது உடுத்திக் கொண்ட வஸ்த்ரத்தை மீண்டும் வெளியில் போய்விட்டு வந்து தீர்த்தமாடி விட்டு உடுத்திக் கொள்ளலாமா என்று கேட்டால் அது உடுத்தி விழுத்த வஸ்த்ரமானதினால் உடுத்திக் கொள்வது அவ்வளவு ஶ்லாக்யம் அல்ல.