திருவாராதனத்தில் எந்த வஸ்துவை சமர்ப்பித்தாலும் ஶோஷனம், தாஹனம், ப்லாவனம் பண்ணவேண்டும் என்று இருக்கின்றது. அந்த வஸ்துவிற்கு சுத்தி வரவேண்டும் என்பதற்காக அதை நாம் செய்கின்றோம். எந்த ஒரு வஸ்துவிற்கும் சுத்தி என்பது, வாயுவினால் அது உலர்கின்ற படியினால் சுத்தி, அக்னியில் அதை காய்ச்சுகின்ற படியினால் சுத்தி, ஜலத்தில் நனைக்கின்ற படியினால் சுத்தி, என்று மூன்று விதம் உண்டு. பொதுவாக பாத்திரங்கள், பழங்களை நாம் அலம்புகின்றோம் அல்லவா அது போலதான் இதுவும்.
அதனால் நாம் என்ன சமர்ப்பித்தாலுமே இந்த மந்த்ரங்களை கொண்டு, வாயுவைக் கொண்டு உலர்த்துகிறபடியாகவும், அக்னியை கொண்டு தஹிக்கிற படியாகவும், ஜலத்தை கொண்டு நனைக்கிற படியாகவும், எல்லாவற்றிற்கும் அந்தந்த மந்த்ரங்களைச் சொல்லியோ அல்லது திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தைச் சொல்லியோ பண்ணினால் அது சுத்தியாகி பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதற்கு யோக்யமாக ஆகும்.