ஆழ்வார்கள் கோஷ்டியில் முதலில் இராமனுசரைச் சேர்த்தது திருக்குருகைப்பிரான் பிள்ளான்.
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
என்பதாக இராமானுசரைச் சேர்த்திருக்கிறார். நம் ஸம்ப்ரதாயம் பிள்ளான் வழி வந்த ஸம்ப்ரதாயம் ஆகையால் தேஶிகனும் ஆழ்வார்கோஷ்டியில் இராமானுசரைச் சேர்த்துள்ளார். இராமானுச நூற்றந்தாதியும் 4000 திவ்ய ப்ரதந்தத்தில் சேரும் என்பது பிள்ளான் வழிவந்த ஸம்ப்ரதாயம். ஆகையால் அதையும் சேர்த்துதான் 4000 கணக்கிடவேண்டும் என்பதும் பிள்ளான் வழிவந்த ஸம்ப்ரதாயமாகும். பிள்ளான் வழியில் வராத ஸம்ப்ரதாயத்தில் அவர்கள் 4000த்தில் இராமானுச நூற்றந்தாதியைச் சேர்ப்பதில்லை, சேர்க்காமல்தான் அவர்கள் 4000 என்ற கணக்குச் சொல்வார்கள். ஆகையால் நம் ஸம்ப்ரதாயத்தின்படி இராமானுச திருநாமத்தை ஆழ்வார்களுடன் சேர்க்கவேண்டும்.
மேலும் ப்ரபந்தஸாரத்தில் இராமானுச நூற்றந்தாதியைப் பற்றி சொல்லும்போது “காசினிமேல் வாதியரை வென்று அரங்கர் கதியாக வாழ்தருளும் எதிராசா!* முன் பூசுரர்கோன் திருவரங்கத்தமுதனார் உன் பொன்னடிமேல் அந்தாதியாகப் போற்றிப் பேசிய*” என்று இங்கு திருவரங்கத்தமுதனார் பற்றி சொல்கிறார். மேலும், பட்டியலிட்டு பூர்த்தியாகப் பாசுரக்கணக்கு சொல்லும்போது அங்கும் அமுதர் திருநாமும் வருகிறது, அர்த்தங்களும் வருகிறது. ப்ரபந்த ஸாரத்தில் தனித்த பாசுரத்திலும், கணக்கிட்ட பாசுரத்திலும் அமுதனார் பற்றி வருகிறது.