நம்மாழ்வார் திருவடி தொழல் மாதிரியே திருமங்கையாழ்வார் திருவடி தொழலும் அதே பாவத்தில்தான் செய்யப்படுகிறது. அதாவது ஆழ்வார் பரமபதம் அடைந்த வைபவத்தைக் கொண்டாடும் படியான உற்சவம்தான் திருவடி தொழல் என்கின்ற உற்சவம்.
திருமங்கையாழ்வார் திருவடி தொழல் என்பது பெரும்பாலும் அதாவது சில தெற்கத்திய திவ்ய தேசங்களில்தான் காணக்கிடைக்கின்றது. முக்கியமாக திருக்குடந்தையில் நாம் இதைச் சேவிக்கலாம். திருக்குடந்தையில் அது எப்படி ஏற்படுகிறது என்றால், திருவடி தொழல் நடந்து முடிந்து எம்பெருமானுக்கு ஆழ்வார் திருவாராதனம் பண்ணுவது போல் ஒரு சேவையை, பக்தர்கள் சேவிக்கும்படியாக ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறார்கள். இதை எந்த ப்ரபந்தத்திற்குப் பின் சேவிக்கிறார்கள் (பண்ணுகிறார்கள்) என்று பார்த்தால் “மாற்றமுளா பதிகத்தை” சேவித்து பின் ஆழ்வார் திருவடித்தொழல் ஆகி, அதன்பின் திருக்குருந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் சேவிப்பது திருக்குடந்தையில் வழக்கமாக இருக்கின்றது. ஆனால், மற்ற சில கோயில்களில் திருநெடுந்தாண்டகம் முடிந்து அதற்குப் பிறகு ஆழ்வார் திருவடி தொழல் என்கின்ற ரீதியும் இருக்கின்றது. ஏனென்றால் திருநெடுந்தாண்டகத்தினுடைய சாற்றுமுறை பாசுரத்தில் “தன்குடந்தை கிடந்த மாலை நெடியானை அடினாயேன் நினைந்திட்டேனே” என்று முடிவதனால், எம்பெருமானை போய் அடைவது போன்ற ஸப்தங்களாக இருப்பதினால், அந்தத் திருவடி தொழலுக்கு அது ஏற்றதாக இருக்கின்றது என்று தெரிகிறது.
மொத்தத்தில் பாவம் என்பது ஒன்றுதான். நம்மாழ்வார் திருவடி தொழலில் எப்படி நம்மாழ்வார் பரமபதம் அடைந்ததை கொண்டாடுகிறோமோ அதேபோல் திருமங்கையாழ்வார் எம்பெருமானைப் பரமபதத்தில் அடைந்ததைக் கொண்டாடுவதே திருமங்கையாழ்வார் திருவடி தொழல். திருக்குடந்தையில் திருமழிசைப்பிரானுக்கும் திருவடி தொழல் உற்சவம் நடக்கிறது என்பது தெரிகிறது. அதனால் ஆழ்வார்களுடைய திருவடி தொழல் உற்சவங்கள் எல்லாம் பக்தாளுக்கு ஆழ்வார் எம்பெருமானுடன் போய் கலந்ததைக் கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.