விழுப்பாக நேர்ந்து விட்டது என்றால் சாயங்காலம் விளக்கேற்றுவதற்காக நேரடியாக தீர்த்தமாட வேண்டிய அவசியமில்லை. ஸ்நானத்தில் பல விதங்கள் உண்டு என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் மந்த்ரஸ்நானம் என்று ஒரு வகை. ஸ்திரீகளுக்கு அதை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று இருக்கின்றது.
அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், சுமங்கலி ஸ்த்ரீகள் மஞ்சள் பொடியை ஜலத்தில் கரைத்து கொண்டு அதை தாடை, கைகள், கால்கள், திருமாங்கல்யத்தில் தடவிக் கொண்டு , பின் ப்ரோக்ஷித்து கொண்டு புண்டரீகாக்ஷய நம: என்று உச்சரிக்க வேண்டும். கூடவே பெருமாள் திருமொழியில் இரண்டாவது பதிகத்தில்
” தோடுலாமலர்மங்கைதோளிணைதோய்ந்ததும் சுடர்வாளியால் *
நீடுமாமரம்செற்றதும்நிரைமேய்த்ததும் இவையேநினைந்து*
ஆடிப்பாடிஅரங்கவோ!என்றழைக்கும் தொண்டரிப்பொடி
ஆடநாம்பெறில் * கங்கைநீர்குடைந்தாடும் வேட்கைஎன்னாவதே? ”
என்று வரும் இரண்டாவது பாசுரத்தையும் அனுசந்தானம் பண்ணலாம். இது ஸ்திரீகளுக்கு சொல்லப்பட்ட மந்த்ரஸ்நானமாகும். இதை பண்ணிவிட்டு விளக்கேற்றலாம். எந்தச் சமயத்திலும் வெளியில் சென்று விட்டு வந்தபின் தீர்த்தமாடுவதற்கு பூர்த்தியாக நேரமில்லை அகாலமாக இருக்கின்றது என்றால் இந்த மாதிரி ஒரு அனுஷ்டானத்தை பண்ணுவது பெரியோர்கள் வழக்கத்தில் இருக்கின்றது.