ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, பலரும் இதை சொல்லியிருக்கின்றனர். இவர்களுக்குள் முக்கியமான வித்தியாசமானது ரிஷிகள் தங்களின் தபஸ்ஸினாலே முயற்சி செய்து அபாரமான ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆழ்வார்களுக்கு, பெருமாள் மயர்வற மதிநலம் அருளினன் என்றுரைப்பது போல் பெருமாளே அந்த ஞானத்தை கொடுத்திருக்கிறார். ஆகையால்தான் ஆழ்வார்கள், ரிஷிகளைக் காட்டிலும் ஶ்ரேஷ்டர்களாக இருக்கிறார்கள்.
ரிஷிகளிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உள்ளனர் அத்திரி, ப்ருகு போன்றோர் நல்ல ஸ்ரீவைஷ்ணவர்கள். அகத்தியரும் ஸ்ரீவைஷ்ணவர் தான். ஆனால் ரிஷிகளுக்கு சமுதாயப் பொறுப்பு இருப்பதினால் மற்ற தேவதாந்திர பக்தர்களுக்காக சில காரியங்கள் செய்வார்கள். வ்யாசர், சிவ புராணம் இயற்றியது போல் எல்லா புராணங்களை இயற்றிய பின் “வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்” என்று கூறியிருக்கிறார். ஆக ரிஷிகள் சமுதாயப் பொறுப்பினால் அவர்களுக்காக அதைச் செய்திருப்பார்கள் அது அவர்களின் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
பெரும்பாலான ரிஷிகள் ஸ்ரீவைஷ்ணவர்களாக தான் இருந்திருக்கிறார்கள். வேதத்திலே சொல்லப்பட்ட சில ரிஷிகள் கூட வேறு மதத்தைச் சேர்ந்தவர்காளாக இருக்கிறார்கள். ஆக நாம் புராணங்களிலிருந்து ஸ்ரீவைஷ்ணவ பாகத்தைமட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் ரிஷிகளைக் காட்டிலும் பலமடங்கு பெருமையுள்ள ஆழ்வார்களை நாம் விசேஷமாக கௌரவிக்க வேண்டும்.