ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் போதும், மற்றவர்கள் கேலிசெய்தால் செய்துவிட்டுப்போகட்டும். அவர்களுக்கு லௌகீக ரீதியாக சொல்லவேண்டுமென்றால் ப்ரதானமந்திரியாக இருக்கிறவர்களுக்கு அனைத்துத்துறைகளையும் பார்க்க/மாற்ற அதிகாரம் உள்ளது, இருந்தாலும் கல்வித்துறை, பாதுகாப்புத்துறை என்று வேவ்வேறு நபர்களை நியமித்து நடத்துகிறார்கள். மேலும் இவை அனைத்தும் பிரதமரின் மேற்பார்வையில்தான் நடக்கிறது. அதுபோல் ஸ்ரீமன் நாராயணன் இதர தேவதைகளை அந்தந்த ஸ்தானத்தில் வைத்து லோக காரியங்களை நடத்துகிறான். நமக்குப் பிரதமர் மிகவும் வேண்டிய நபராக இருக்கும்போது அவர் நமக்குச் செய்யத்தயாராக இருக்கும் பக்ஷத்தில் நாம் எதற்கு வேறு அமைச்சர்களிடம் போவோம் அதேபோல் எம்பெருமான் நமக்கு வேண்டப்பட்டவனாக இருந்து அவனை வேண்ட நமக்கு அனைத்தும் நடத்திக்கொடுப்பான். ஏனென்றால் அனைத்து தேவதைகளின் அந்தர்யாமியாக இருப்பது ஸ்ரீமன் நாராயணன்தான், அவனையே ஶரணடைந்தால் வேறு எந்தத் தெய்வத்திடமும் போகவேண்டிய அவசியமில்லை நமக்குப் பாபமும் வராது. இப்படிப்பட்ட மஹாவிஶ்வாசம் தேவை.