அகத்தில் பார்யாள் ரஜஸ்வலையாக இருக்கும் போது அவர்களுக்கு என்று தனியாக சமைக்க வேண்டுமா. அல்லது திருவாராதனத்தில் கண்டருளிய அன்னத்தைப் புருஷர்கள் உண்ட பின்பு அவர்களுக்கு சாதிக்கலாமா. ரஜஸ்வலை காலத்தில் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைத் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ரஜஸ்வலையின் போது முக்கியமாகக் கடைபிடிக்கவேண்டியது, ரஜஸ்வலையாக இருப்பவர்கள் தனியாக இருக்கவேண்டும். தனியறை, தனி Washroom போன்றவைகளுக்கு வசதி இருந்தால் அவர்கள் அங்கே இருக்கலாம். ஒருவேளை தனி Washroom இல்லையென்றால் அவர்கள் உபயோகித்தபின் சாண ஜலம் தெளித்தப் பின் உபயோகிக்கலாம். அதேபோல் உள் தனியாக இல்லை என்றால் அதாவது ஒரு அறை, ஒரு தளிகையறைதான் இருக்கிறது என்றால் ஒரு 5 , 6 அடியாவது அவர்கள் தள்ளியிருக்கலாம். அந்தச் சமயத்தில் அவர்கள் உபயோகித்த போர்வை, தலையணை போன்றவற்றை, அதற்குப்பின் நிச்சயமாக நனைத்து உலர்த்திதான் உபயோகப்படுத்த வேண்டும். அதேபோல் தான் மிதியடியும், திரைச்சீலையும்.
பொதுவாக தளிகை அவர்களுக்குத் தனியாகப் பண்ணிப்போடுவார்கள், ஏனென்றால் பெருமாள் திருவாரதனம் வரை அவர்கள் காத்திருக்கவேண்டியதில்லை. இது உத்தமமான கல்பம். இன்று இரண்டுபேர்தான் இருக்கிறார்கள், அவர் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் தனியாகத் தளிகை பண்ணுவது கடினம்தான். தளிகை பண்ணிவிட்டு அகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் ஸ்த்ரீ, புருஷர்காள், உபநயனமான குழந்தைகள் உட்பட சாப்பிட்டபின் அதற்குப் பிறகு அந்தத் தளிகையை முகர்ந்து பார்த்துவிட்டபின் அவர்களுக்குப் போடுவது என்றிருக்கிறது. அவர்களுக்குப் போட்டபின் மீதியிருப்பதைச் சேஷம் என்று சொல்வார்கள், மேலும் அதை உள்ளே சேர்க்கக்கூடாது. அந்தப் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தபடுத்திய பிறகே உபயோகிக்கவேண்டும்.
பொதுவான வழக்கம் அவர்களைப் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது என்பதாக இருந்தாலும் இருவர் மட்டும் இருக்கும் பக்ஷத்தில் இது சற்று கடினம்தான் ஆகையால் தேவையானளவு அவர்களுடன் பேசலாம், மற்றபடி இதர நாட்கள் போல் அவர்களுடன் அமர்ந்து பேசுவதென்பது கூடாது. இன்றும் கட்டாயம் அவர்கள் தனியாக தள்ளியிருத்தல் வேண்டும். அவர்கள் உபயோகித்த வஸ்த்ரங்களும், பாத்திரங்களும் அவர்கள் குளித்தபின் கட்டாயம் நனைத்துதான் அவர்களாலேயே உபயோகிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top