ஸ்ரீவிஷ்ணு புராணம், மஹாபாரதம் இவையெல்லாம் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியா டிரஸ்டில் போட்டிருக்கிறார்கள் அவர்களை அணுகவும். ஸ்ரீமத் ராமாயணம் போட்டு இருக்கிறார்கள் ரொம்ப மிகவும் பழைய பதிவு இருக்கின்றது இப்பொழுது கிடைக்குமா என்று தெரியவில்லை.அதைப் பார்த்து சொல்கிறேன். பகவத் கீதை இப்பொழுது APN ஸ்வாமி போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். திவ்ய ப்ரபந்தம் எல்லாம் ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படிதான். அதனால் எங்கே கிடைக்குமோ வாங்கிக் கொள்ளலாம். நமது ஸம்ப்ரதாயக்காரர்கள் போட்டிருப்பதை வாங்கிக் கொள்ளலாம்.
துளஸீச் செடியிலிருந்து விழுந்த இலைகளை திருவாதாரனத்திற்குப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் துளஸீயை சுத்தமாக இருந்து மந்த்ரம் சொல்லி க்ரஹித்துதான் உபயோகப் படுத்தவேண்டும்.
பரிக்ஷித்மஹாராஜாவிற்கு விடை அளிக்கும் பொழுது சிவனைப் போல் நாமும் விஷம் அருந்த முடியாது என்று ஸ்ரீமத் பாகவதத்தில் சுகபிரம்ம மகரிஷி கூறுகிறார். ஏன் பெருமானை உதாஹரணமாக சொல்லாமல் சிவனைச் சொல்லி இருக்கிறார் என்றால் சிவன் பண்ணுவதையே நம்மால் பண்ண முடியாது என்னும் பொழுது பெருமாள் பண்ணுவதை நாம் எப்படிப் பண்ண முடியும் என்பதற்காகத்தான். அந்தப் பாவத்தில் சொல்லியிருக்கிறார். இதை எல்லோருமே அப்படித்தான் வ்யாக்யானம் பண்ணியிருக்கிறார்கள். பகவானுடைய லீலைகள் எல்லாம் இருக்கட்டும் சிவனுடைய லீலைகளையே நம்மால் பண்ண முடியாது என்கின்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.
துளஸீ மாலையைச் சுத்தமாக இருக்கும் பொழுது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அதனால் சுத்தமாக பகலில் மட்டுமே அணிந்து கொள்வார்கள் மற்ற சமயங்களில் தீட்டுப் படாமல் இருக்க வேண்டும். அந்த மாதிரி இருந்தால் தரித்துக் கொள்ளலாம்
பரசுராமர் பெருமாளுடைய அம்சமாக இருந்தாலும் ஜீவாத்மா என்று ஒருவர் அவருள் இருக்கின்றார் இல்லையா அவர்தான் பீஷ்மரிடம் தோற்றார். பெருமாள் அம்சத்தின் மூலமாக அவர் க்ஷத்ரியர்களை வதம் செய்தார். அப்படிப்பட்ட சக்தி அவருக்கு வந்தது என்று தெரிகிறது. ஆனால் பீஷ்மரிடம் தோற்கும் பொழுது அந்தப் பகவதம்சம் வேலை செய்யவில்லை, ஏனென்றால் பரசுராமர் ஜீவர் என்பதனால். அந்த மாதிரியான ஆவேச அவதாரங்கள் எல்லாம் அப்படித்தான். ஜீவன் என்கின்ற அம்சத்தில் சிலது நடக்கும் பெருமாளுடைய ஆவேசம் என்கின்ற அர்த்தத்தில் சிலது நடக்கும். பெருமாளுடைய ஆவேச அவதாரம் முடிந்தது என்று வைத்துக் கொண்டால் அவர் ஜீவன் என்கின்ற கணக்கில் ஆகிவிடுவார்.