“உளன் கண்டாய் நன்னெஞ்சே” என்ற வரிகள் இயற்பாவில் பலமுறை வந்திருக்கின்றது. இது ஆச்சரியமான ஒரு அனுபவம். பாசுரத்தைப் பார்த்தால் நமக்கே புரியும். “உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமனென்றும் உளன் கண்டாய் உள்ளுவாருள்ளத்து உளன்கண்டாய்” என்று பெருமாளை யார் நினைக்கிறார்களோ அவர்கள் மனதில் பெருமாள் இருக்கின்றார். இருக்கிறாரா இல்லையா என்றால் நினைத்து பார்த்தால்தானே தெரியும். அதனால் பகவானை யார் நினைத்து பார்க்கிறார்களோ அவர்கள் மனத்தில் பகவான் கட்டாயமாக இருக்கின்றார். அவர்களைக் கேட்டால் தெரியும். பகவானை நினைத்துப் பார்க்காமல் இருக்கின்றவர்கள், அவன் இருக்கிறானா இல்லையா என்று வெளியில் கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால் நினைக்கிறவனைப் பொறுத்த வரைக்கும் அவன் மனத்தில் பகவான் நித்யமாக இருந்து கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தின் மூலம் அவரை நன்றாக உணர முடியும்.
அது மட்டுமல்லாமல், அதே பகவான் தான் “வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்துமேயானும்” என்று சொல்வது போல் வெளியில் பல இடங்களிலும் நம் ஹ்ருதயத்திலும் பகவான் இருக்கின்றார் என்று அழகாகச் சொல்லக்கூடிய பாசுரம் என்பதுதான் அதனுடைய விசேஷம். “விபவம் அர்சா அந்தர்யாமி” என்று பகவான் இப்படி பல ரூபங்களில் இருக்கின்றதே நமக்குப் பலவிதமாக சேவை சாதிப்பதற்கு தான். அந்தர்யாமியாக பகவான் உள்ளுக்குள் இருக்கின்றான், அர்சா ரூபத்தில் பகவான் வெளியில் இருக்கின்றான், விபவ ரூபத்தில் பகவான் அவதாரம் எடுத்து இருக்கின்றான். அப்படி எல்லாவிதமாகவும் பகவான் இருக்கும் பொழுது அவனை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். நமக்குப் புரிய வைப்பதற்காக பல ரூபங்களில் பகவான் இருக்கின்றான் என்று சொல்லக்கூடிய பாசுரம் அது.