பொதுவாக ஸ்தோத்திரங்கள் மற்றும் ப்ரபந்தங்களை எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். இதில் பெரிய நியமங்கள் எதுவும் கிடையாது. வேதபாராயணத்திற்கு நிறைய நியமங்கள் உண்டு. இந்த நேரத்தில்தான் சேவிக்க வேண்டும் அனத்யயனத்தில் சேவிக்கக்கூடாது முதலானதெல்லாம் உண்டு. சில வேத பாகங்களை இரவில் சேவிக்கக்கூடாது என்று உண்டு. தீட்டுச் சமயத்தில் செல்லக்கூடாது, இதுபோல் எத்தனையோ நியமங்கள் உண்டு.
ஆனால் திவ்ய ப்ரபந்தத்திற்கோ, ஸ்தோத்ரங்களுக்கோ அந்த மாதிரி பெரிய அளவில் நியமங்கள் எல்லாம் கிடையாது. தாராளமாக எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். காலை, மாலை சேவிக்கலாம். சிலதில் சேவித்தால் விசேஷ பலன் உண்டு என்று சொல்லுவார்களே தவிர மற்றபடி கூடாது என்று எதுவும் கிடையாது. ஒன்று மட்டும்தான் மார்கழி மாதம் திருப்பாவை மாதம் அந்தச் சமயங்களில் திவ்ய ப்ரபந்தத்திற்கு அனத்யயனம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பாவைத் தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டார்கள். அந்தச் சமயத்தில் அந்த ஊர் பெரியவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள். அது பெரிய விஷயம் கிடையாது. அது தவிர மற்றபடி எந்தப் பாதகமும் கிடையாது. வேதத்திற்கு இருப்பது போல் அத்தனை நியமங்களும் இவற்றிற்குக் கிடையாது.