இந்த ஶ்லோகங்களைச் சேர்த்துப் பார்த்தால் என்ன முரண் என்று சொல்கிறார் எனத் தெரியவில்லை. மஹாதேவ: என்று வருணனை கோவிந்தராஜர் சொல்லியிருக்கிறார். மஹாதேவ: என்றால் சிவனுக்கு பெயர் என்று இராமாயணத்தில் முன் ஶ்லோகத்தில் இருக்கிறது.
மஹாதேவ: என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. பெருமாளுக்கே இப்பெயர் உண்டு. ஶ்ரீ இராமன் சந்நிதியில் எழுந்தருளியிருந்த ஶ்ரீரங்கநாதருக்கு “மஹாதேவ:” என்று பெயர் என்று ஶ்ரீமத் இராமாயணத்திலேயே வரும். “மஹாதேவ:” என்றால் பெரிய தேவன் என்றும் சொல்லலாம்.
“அத்ரபூர்வம்மஹாதேவःப்ரஸாதமகரோத்ப்ரபுः” என்று சொல்லுமிடத்தில் – நான் இலங்கை வருவதற்கு முன்னர் மஹாதேவர் அனுக்ரஹம் பண்ணார் என்று சொல்லியிருக்கிறார். ஸமுத்ரராஜன்தானே உதவி செய்தது. ஆகையால் அவரைக் குறிப்பிட்டதாகவோ அல்லது வருணதேவனை குறிப்பிட்டதாகவோதான் இருக்கவேண்டும். என்னென்றால், சிவன் வந்து அனுக்ரஹம் செய்ததாக ஶ்ரீமத் இராமாயணத்திலும் இல்லை யாரும் அந்தக் கதையைச் சொல்லவில்லை. இங்கே வ்யாக்யாணத்திலும் மஹாதேவ: என்று வருணனைதான் சொன்னார் என்று தெளிவாக இருக்கிறது.