அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டதால் தேவதாந்தரங்களை வழி படுவதில்லை, பரந்யாஸத்திற்கு முன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதுண்டு, சின்ன வயதில் இருந்து வந்த அகத்து வழக்கத்தால். இப்போது நான் நிறுத்தியதை அறிந்து, பரந்யாஸம் ஆன என் பெற்றோர்களே பிள்ளையாரை விஷ்வக்ஸேனராக பாவித்து பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடலாம் என்கிறார்கள். நான் என்னால் இயன்ற வரை பிள்ளையார் விஷ்வக்ஸேனர் இல்லை என்று எடுத்துக் காட்டி விட்டேன், ஆனாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. படிக்கும் குழந்தைகள் இருந்தால் விநாயகர் சதுர்த்தி கொண்டலாம் என்கிறார்கள். அத்துடன் அம்மாவுக்கு ஒரு ஜோஸியர் அவருடைய சின்ன வயதில் (இப்பொழுது அவருக்கு 87 ஆவது திருநக்ஷத்திரம் நடந்து வருகிறது) கேது தோஷம் உள்ளதால் அவர் பிள்ளையை பாதிக்கும் என்று கூறியுள்ளார், ஆகையால் கடந்த 50 வருட காலமாக பிள்ளையார் வழிபாடு செய்து வருகிறார். பரந்யாஸம் ஆகியும் இதை தொடர்ந்து வருகிறார், பாதுகா ஸஹஸ்ரம், மற்றும் தேஶிகர் ஸ்லோகங்கள், தேஶிகர் பிரபந்தம், நித்யம் ஶ்ரத்தையுடன் கடந்த 15 வருட காலமாக பரந்யாஸம் ஆனது முதல் ஆசாரியர் தனியன்களுடன் நித்யம் அனுஸந்தானம் செய்கிறார். அப்பாவும் தனது 92வது வயதிலும் ஒரு நாள் தப்பாமல் பெருமாள் திருவாராதனம் மற்ற அனுஷ்டானங்கள் செய்து வருகிறார். ஏன் இந்தத் தேவதாந்தர மோகம் என்று புரியவில்லை, எப்படி இவ்வளவு பெரியவர்களுக்கு அடியேன் புரிய வைப்பது என்று கவலையாக உள்ளது, தேவரீர் வழி காட்டும் படி விண்ணப்பிக்கிறேன்.

பிள்ளையாரும், விஷ்வக்ஸேனரும் ஒருவர் இல்லை என்பதை மேலும் சில விஷயங்களைச் சொல்லித் தெளிவாக விளக்க முயலலாம். விஷ்வக்ஸேனர் நம் ஆசார்ய கோஷ்டியில் சேர்ந்தவர் எம்பெருமானின் ஸேனைமுதலியார். அவருடைய பரிஜனங்களில் ஒருவர் கஜவக்த்ரராவார், அவர் யானைமுகமும், இரண்டு தந்தங்களும், சங்க-சக்ரமும் உடையவர்.பிள்ளையாருக்கு இவ்வடையாளங்கள் கிடையாது. அவருக்கு சங்கு-சக்ரங்கள் கிடையாது, மேலும் அவர் ஏக தந்தராவார். பிள்ளையார் தேவதாந்தரம். கஜவக்த்ரரோ விஷ்வக்ஸேனரின் பரிஜனராவார் போன்ற விளக்கங்களை விஸ்தாரமாக விளக்கலாம். ப்ரந்யாஸம் ஆனவர்கள் தேவதாந்தரங்களைச் சேவிக்கக் கூடாது.
இப்படிச் சேவிக்காமல் விட்டால் எவ்விதமான தோஷமும் பாதிக்காது. “நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே” என்று ஆழ்வார் பாடுகிறார். எந்தத் தேவதையானாலும் எம்பெருமானுக்கு அடிபணிந்தவர்கள்தான். எம்பெருமானின் அடியார்களுக்கு எவ்வித கேடும் விளைவிக்க முடியாது என்பதை உறுதியாக நம்பவேண்டும்.
ஒருகால் கேது தோஷம் ஏற்படுமோ என்ற பயமிருந்தால், கருட பஞ்சாஶத்தைச் சேவித்தால் சர்ப சம்பந்தமான எல்லாவிதமான தோஷங்களும் நீங்கும். நீங்கள் சொல்லியிருப்பது போல் தேஶிக ஸ்தோத்ரங்கள் எல்லாம் சேவித்துக்கொண்டிருக்கலாம். இத்தோஷம் ஏற்படுமோ என்ற பயம் நீங்க வேண்டும் என்பதை நினைத்து கருடபஞ்சாஶத் சேவிக்கலாம்.
பரந்யாஸம் ஆகும்வரை தெரியாமல் இத்தனை வருடங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதில் தவறில்லை. அதன் பாபங்கள் பரந்யாஸம் ஆகும் சமயம் நீங்கிவிடும். ஆனால் பரந்யாஸம் ஆனபின் தெரிந்து கொண்டாடினால் அது பாபமாகும். நிச்சயமாக பண்ணக்கூடாது. மேலும் அது நேரக்கூடாது என்று சிறியவர்கள் நினைப்பே பெரியவர்களுக்கு நேராமல் காக்கும்.
அவர்களுக்கு புரிய வைக்க என்ன செய்யலாம் என்றால், அவர்களை ஶ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் ஶ்ரீ உ வே நாவல்பாக்கம் வாஸுதேவாசார்யார் ஸ்வாமி சாதிக்கயிருக்கிறார், அதன் விவரங்கள் கீழேயுள்ள linkல் இருக்கிறது.
https://www.sampradayamanjari.org/kalakshepams/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top