மடி என்பது ஆசாரமான வஸ்த்ரங்களைக் குறிக்கும்.
அரிசியில் செய்த சாதத்தின் பெயர் பத்தாகும், கையில் ஒட்டிக்கொண்டு விடுவிதால், பற்றிக்கொள்வது என்ற அர்தத்தில் அது பற்றாகும் அதுவே பத்து என ஆனது. அதனுடன் சேர்த்து எதை வைத்தாலும் அவை எல்லாம் பத்து. அப்படி அல்லாது தனியாக வைத்தால் அது பத்தாகாது, சாதம் மட்டுமே பத்தாகும்.
பலகார சமயத்தில் பத்து, கூடாது என்றுள்ளது, அதனால் எந்த வஸ்துவானாலும் சாதத்துடன் சேர்ந்து வைத்திருந்தால் அதைச் சாப்பிடக்கூடாது.
குறிப்புகள்:
மடி
இரவு வேளையிலே படுக்கையிலே பட்டுக் கொண்டோமேயானால் நாமும் நாம் தரித்திருக்கக்கூடிய வஸ்த்ரங்களும் விழுப்பாக ஆகும்.
அந்த விழுப்புக் கழிய நாம் தீர்த்தமாட வேண்டும். நம் வஸ்த்ரங்களை ஜலத்திலே நனைத்து நன்றாகத் தோய்த்து, கொடியிலே வஸ்த்ரங்களைக் காய வைக்கவேண்டும்.
கொடியில் உலர்த்திய வஸ்த்ரங்களைக் தொடக்கூடாது. நம் கையோ இல்லை சரீரத்தினுடைய எந்த ஒரு பாகமும் அந்த வஸ்த்ரத்தின் மேல் படக்கூடாது. நாம் சுத்தமாய் இருக்கக்கூடிய நிலையில் அதை எடுத்து உடுத்திக் கொண்டோமேயானால் மடியாக, ஆசாரமாக வஸ்த்ரம் உடுத்திக் கொண்டுள்ளோம் என்றாகும்.
பத்து
நெய் பால் தயிர் போன்ற வஸ்துக்களுக்குப் பத்து கிடையாது.
பத்தையும் பத்தில்லாததையும் எப்பொழுதுமே கலக்கக்கூடாது. தனித்தனி இடங்களில் வைத்திருக்க வேண்டும். தனித்தனியாக தான் அவைகளை உபயோகப்படுத்தவும் வேண்டும்.
உதாஹரணத்திற்கு: சாப்பிடும் பொழுது சாதம் சாதித்துவிட்டு மேலே நெய் விடுவதற்கு முன் கையை அலம்பிய பின்புதான் நெய் பாத்திரத்தை தொட வேண்டும்.
அதேபோல உணவைத் தயாரிக்கும் பொழுது பத்தும், பத்தில்லாத இடத்தையும் தனித் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். சாதம் பண்ணக்கூடிய அடுப்பும் பால் காய்ச்சக்கூடிய அடுப்பும் வெவ்வேறாக இருந்தால் உத்தமம். ஒருகால் அந்த மாதிரி ஒரே அடுப்பை பயன்படுத்தும் படியாய் இருக்கும் பக்ஷத்தில் சாதம் பண்ணிய பிறகு அந்த இடத்தையும் அடுப்பையும் சுத்தி செய்துவிட்டு அதன் பின் பால் காய்ச்சலாம்.
சில உணவு வகைகள் நாம் நீண்டகால பயன்படுத்தும் படியாக இருக்கும். உதாஹரணத்திற்கு ஊறுகாய்கள் , இட்லி மாவு தோசை மாவு போன்ற பதார்த்தங்கள். இவைகளையும் பத்து சாமான்களோடு கலக்காமல் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பத்து சாமான்கள் தொட்ட கையை அலம்பிவிட்டு தான் பத்தல்லாதவற்றைத் தொடவேண்டும்.