ஸஹஸ்ரநாமத்தை அருளிச்செய்தவர் ஸ்ரீபீஷ்மர். அவர் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் என்று பெயர் வைத்திருந்ததால் அதைப் பின்பற்றி எல்லோரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்று சொல்லுகிறோம்.
குறிப்புகள்:
விஷ்ணு என்கிற திருநாமம் பெருமாளுக்கு வேதத்தில் மிகவும் ப்ரசித்தம். குறிப்பாக வேதத்தின் பூர்வ பாகத்தில் யாகங்களைப் பற்றி சொல்லும் பொழுது எம்பெருமானுடைய திருநாமங்களில் விஷ்ணு என்கின்ற நாமம் தான் மிகவும் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது மற்றத் திருநாமங்கள் குறைவாகவே வருகின்றது. வேத ரீதியில் ப்ரசித்தமான திருநாமம் அதனால் அதைச் சொல்லுகின்றோம்.
“நாமம் ஆயிரமேத்த நின்ற நாராயணா” என்று ஆண்டாள் சாதித்திருக்கின்றபடியால் மற்ற திருநாமங்களைச் சொல்வதில் ஒன்றும் தவறில்லை.