இதற்கு பெயர் தான் தர்ம சங்கடம்.
குறிப்புகள்:
அதாவது, பீஷ்மர் துரோணர் முதலானோர்கள் ஒரு பெரிய அளவு தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பக்கம் அவர்களுக்கு அதர்மம் நடக்கின்றது என்று ஒரு ரீதியில் தெரிகின்றது. ஆனால் அதே சமயம் அதைத் தடுக்க முடியாத ஒருநிலை அவர்களுக்கு இருந்தது. அந்தத் தேசத்து ராஜாவாக இருந்த த்ருதராஷ்டிரர்க்குக் கட்டுப்பட்டு, அந்த மந்திரி சபையில் இருந்தவர்கள். மந்திரி சபையில் இருப்பவர்கள் ராஜாவுக்குத் தக்க சந்தர்ப்பத்தில் தங்கள் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்வார்கள்.
சபையின் நடுவில் ராஜாவை அவமதித்துப் பேசி சபை காரியங்களைத் தடுத்து நிறுத்துவது அந்தக் காலத்தில் நடந்ததில்லை. தர்மபுத்திரர் பீஷ்மரிடம், அவர் அமைதியாக இருந்ததன் காரணத்தைக் கேட்கும்பொழுது பீஷ்மர் கூறுவதாவது, தர்மபுத்திரர் தர்மம் தெரிந்தவர் அவன் ஒருநாளும் தப்புக் காரியம் செய்ய மாட்டான் அவன் எது செய்தாலும் அதற்குப் பின்னால் ஒரு நியாயமான அர்த்தம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் என்கிறார்.
தர்மபுத்திரர் ஏன் ஒத்துக் கொண்டார் என்பதுதான் ப்ரதானமான கேள்வி. தர்மபுத்திரர், தவறு செய்ய மாட்டார் என்று எல்லோருக்கும் அவரிடம் ஒரு விஶ்வாசம். ஒரு காலக்கட்டத்தில் குடும்பத்திற்குள் பிரச்சனை சண்டை அதிகமாக ஆன பக்ஷத்தில் தர்மபுத்திரர், த்ருதராஷ்டிரன் (பெரியப்பா) எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் அதைச்செய்யும் முடிவிற்கு வந்துவிட்டார். ஏனென்றால் பெரியப்பாவிடம் அவருக்கு மிகுந்த கௌரவம், மரியாதை.
பீஷ்மர் போன்றவர்க்குச், செஞ்சோற்று கடன், தேசப்பற்று, க்ருதக்ஞதா, இப்படி பலவிதமான தர்மங்கள் இருக்கின்றன இதை நாம் புரிந்து கொள்வதுக் கஷ்டம். மகாபராதத்தை ஆராய்ந்து பார்த்து மெதுவாகத்தான் புரிந்துக்கொள்ள முடியும்.