ஏகாதசி விரதம் ஸ்ரீவைஷ்ணவ, ஸ்மார்த்த மற்றும் மத்வ என மூவருக்கும் வித்தியாசப்படும்.
முதல் நாள் தசமி 56 நாழிகைக்கு மேல் இருந்தால் மறுநாள் ஏகாதசி வித்தம், தோஷம் உள்ளது என்பதாகும். அப்படி 56 நாழிகைக்கு மேல் தசமி சம்பந்தப்பட்டிருந்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அன்று ஏகாதசி வ்ரதம் இருக்கும் வழக்கமில்லை. அதற்கு மறுநாள் தான் ஏகாதசி இருக்க வேண்டும்.
உதாஹரணம் : திங்கட்கிழமை அன்று 56 நாழிகைக்கு மேல் தசமி இருந்ததானால் செவ்வாய்க்கிழமை ஏகாதசி கிடையாது அதற்கு மறுநாளே ஏகாதசி. அதாவது செவ்வாய்க்கிழமை வருகின்ற ஏகாதசி திதிக்கு ப்ரம்ம முகூர்த்தத்தில் தசமி சம்பந்தப்பட்டிருப்பதால் அன்று ஏகாதசி கிடையாது.
ஸ்மார்த்தர்கள் துவாதசியை ப்ரதானமாக வைத்துக்கொண்டு அதற்கு முதல் நாள் ஏகாதசி என்று வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரிகின்றது.
பஞ்சாங்கத்தில் முதல்நாள் ஸ்மார்த்த ஏகாதசி என்றும் மறுநாள் ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி என்றும் இருக்கும்.
54 நாழிகைக்கு மேலேயே தசமி சம்பந்தப்பட்டால் அதுவே தோஷம் என்பது மத்வ சம்ப்ரதாயம்.
எப்பொழுதாவது 54 நாழிகைக்கு மேல் 56 நாழிகைக்குள் தசமி சம்பந்தப்பட்டால் அப்பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் மற்றும் ஸ்மார்த்தர்களுக்கு முதல் நாள் ஏகாதசி என்றும், மத்வர்களுக்கு மறுநாள் ஏகாதசி என்றும் பஞ்சாங்கத்தில் இருக்கும்.