ஸந்த்யாவந்தனத்தில் துரீய அர்க்யம் எந்தக் காலத்தில் ஸம்பவிக்கும்? – அந்தந்த ஸந்த்யாவந்தன காலத்திற்கு முன்பு ஸந்த்யாவந்தனம் செய்வதாக இருந்தாலா (அ) பின்பு செய்வதாக இருந்தாலா? முன்போ (அ) பின்போ, இவ்வளவு மணி நேரத்திற்குள் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்ற கணக்குள்ளதா? உதாஹரணமாக காலை ஸந்த்யாவந்தனத்தை விடியற்காலை 4 மணிக்கோ அல்லது 11 மணிக்கோ பண்ணலாமா?.

ஸந்த்யாவந்தனத்தில் சூர்யோதயம் முன்னர் மூன்று அர்க்யம் ஸமர்பிக்க வேண்டும். சூர்யோதயமாகி விட்டால் காலம் கடந்ததென்று அர்த்தம், அப்போது ப்ராயச்சித்தமாக நான்காவது அர்க்யம் விட வேண்டும். அது தான் துரீய அர்க்யம் என்று பெயர்.
சூர்யோதயத்திற்கு முன் ஸந்த்யாவந்தனம் செய்வதாயிருந்தால் துரீய அர்க்யம் ஸமர்பிக்க வேண்டியதில்லை.
அதே போல் சூர்யஅஸ்தமனத்திற்கு முன்னர் அர்க்யம் ஸமர்பித்தால் துரீய அர்க்யம் ஸமர்பிக்கவேண்டியதில்லை.
சூர்யோதயமும் அஸ்தமனமும் நாளுக்கு நாள் மற்றும் வெய்யில்காலம், மழைக்காலம் என்று காலத்திற்கேற்றார் போலும் மாறிக்கொண்டே இருப்பதால் இவ்வளவு மணி நேரம் என்று சரியாகச் சொல்லமுடியாது.
ஆகையால் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு சூர்யோதயம் அஸ்தமனம் எப்போது என்று பார்த்து அதற்கு முன்னர் ஸந்த்யாவந்தனம் செய்து அர்க்யம் விட்டால் துரீய அர்க்யம் ஸமர்பிக்க வேண்டியதில்லை.
அதிகாலை 4 மணிக்கு ஸந்த்யாவந்தனம் பண்ண முடியாது ஏனென்றால் ஸந்த்யாவந்தனத்தை சூர்யோதயத்திற்கு முன் ஆரம்பித்து சூர்யோதமான பின்னர் தான் உபஸ்தானம் முடிக்கவேண்டும் என்றுள்ளது. சூர்யோதயமாகும் முன்னர் அர்க்யம் விடணும் ஆன பின்னர் உபஸ்தானம் பண்ணவேண்டும் என்றுள்ளது.
காலை 4 மணிக்குப் பண்ணால் அது அகாலே க்ரியமாணம் அதற்கு மதிப்புகிடையாது. அதனால் மீண்டும் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும்.
வேறு வழியில்லாமல் கார்யாந்தரமாக அல்லது வெளியில் பயணம் போய்விட்டு வர நாழியாகிறது என்றால் 11 மணிக்கு துரீய அர்க்யம் ஸமர்பித்துச் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top