முதன் முதலில் ருது பருவம் ஒரு பெண் அடைந்தவுடன், அந்த பெண்ணை உட்கார வைத்து அவளுக்கு பாலும் பழமும் தரவேண்டும்.
எப்படித் தர வேண்டும் என்றால் , வாழைப்பழத்தை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி வைத்துக்கொண்டு அந்தத் துண்டங்களை முதலில் வாயில் போட்டு பின்பு பாலை வாயில் விட வேண்டும். இதை க்ருஹத்தில் இருக்கும் சிறுவர்களை விட்டு அவளக்குப் பக்கத்தில் போய் கொடுக்கச் சொல்லலாம். பெரியவர்கள் அவளிடம் போய்க் கொடுத்து விட்டு வந்தால் தீர்த்தாமாடவேண்டும். ஏனென்றால் அந்தப் பெண் மூன்று நாட்கள் தனியாக உட்கார வேண்டும். வேறு யாரும் க்ருஹத்தில் இல்லை அம்மாவும் பெண்ணும் மட்டுமே இருந்தால், அவளுக்குப் பக்கத்தில் அந்த பால் பழத்தை வைத்து விட்டு அவளையே எடுத்துச் சாப்பிட சொல்லலாம்.
அன்று மஞ்சள்பொங்கல் செய்து தருவது வழக்கம். மஞ்சள் பொங்கல் என்பது அரிசியையும் துவரம் பருப்பையும் சேர்த்துப் பண்ணக்கூடிய பொங்கல். அரிசியுடன் பயத்தம்பருப்புக்கு பதிலாக துவரம்பருப்பைச் சேர்த்து மஞ்சள்பொடி சேர்த்து பொங்கல் மாதிரி அதை குழைத்து இஞ்சி, மிளகு சீரகம் கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து செய்து அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும்.
அடுத்தநாள் உளுந்து வடையோ, உளுந்து சாதமோ அல்லது உளுந்தை வைத்து ஏதாவது ஒரு பதார்த்தமோ பண்ணி கொடுக்கலாம்.
மூன்றாவது நாள் குணுக்கு, மற்றும் அப்பம் குத்தி தருவது வழக்கம். குணுக்கு என்பது அரிசியை ஊறவைத்து அதை அரைத்து அதை எண்ணெயில் போட்டு செய்வது. அப்பம் என்பது சாதாரணமாக ஸ்ரீ ஜெயந்திக்கு செய்வது போல் செய்து கொடுக்கலாம்.
இவையெல்லாம் மூன்று நாட்கள் அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டிய ஆகாரங்கள்.
நான்காவது நாள் அவளே தலையில் எண்ணை வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். அவளுக்கு தானே தீர்த்தமாட தெரியவில்லை என்றால் யார் தீர்த்தாமாடி விடுகிறார்களோ(திருமணமான ஸ்த்ரீகளாக இருந்தால்) அவர்களும் ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். அதன்பிறகு அவளை மணையில் உட்காரவைத்து நலங்கிட்டு, நெற்றியில் பொட்டு வைத்து, தலையில் பூ வைத்து, புதிதாக வாங்கி வைத்திருக்கும் வஸ்திரம் (பாவாடை- தாவணி) நகைகளை கொடுக்கலாம். . பின் அந்த புது வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு வரச்சொல்லி திரும்பவும் மணையில் உட்கார வைக்க வேண்டும். சில க்ருஹங்களில் த்ருஷ்ட்டி கழிப்பதற்காக எத்தி இறக்குவது என்று ஒரு ஸம்ஸ்காரம் உண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு விளக்கை வைத்து அந்த குழந்தையின் தலையிலிருந்து கால் வரை ஏத்தி இறக்க வேண்டும். எல்லா க்ருஹங்களிலும் அது வழக்கமாக இருக்காது. அவரவர் ஆத்து வழக்கப்படி செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு அம்மான் சீர் கொடுப்பது வழக்கம். அதாவது அந்தக் குழந்தையுடைய அம்மாவினுடைய பிறந்தகத்திலிருந்து என்ன சீர் கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்களோ அதை முதலில் கொடுத்திவிட்டு பின் வந்திருக்கும் மற்ற உறவினர்கள் ஏதாவது கொடுக்க ஆசைப்பட்டால் அவர்கள் ஓதியிடலாம்.
முக்கியமாக அந்தக் குழந்தைக்குப் புட்டு செய்து சாப்பிட கொடுப்பது வழக்கம். இதிலும் சில வேறுபாடுகள் உண்டு, சில க்ருஹங்களில் ஸ்நானம் செய்வதற்கு முன் அதாவது மூன்றாம் நாளே புட்டு செய்து கொடுத்து விடுவார்கள். சிலர் நான்காம் நாள் ஸ்நானம் செய்த பின் மணையில் உட்கார்த்தி வைத்து புட்டு கொடுப்பது வழக்கம்.
இவை எல்லாம் முடிந்த பின் மஞ்சநீர் சேர்த்து மங்களம் பாடி பூர்த்தி செய்து கொள்ளலாம்.