ஆஞ்சநேயர் ருத்ரனின் அம்சம் என்று நமது பூர்வாசார்யர்கள் எங்கும் எழுதவில்லை. ஸ்வாமி தேஶிகன் ப்ரத்யேகமாக ஏன் ஸ்தோத்ரங்கள் எழுதவில்லை என்பதற்கு இதென்று குறிப்பாக காரணம் சொல்ல முடியாது. ஏன் என்று கேட்டால் ஸ்வாமி இயற்றிய ஶ்லோகங்கள் அனைத்தும், ஒவ்வொரு இடமாக சென்று எல்லாரையும் குறித்துப் பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்று சங்கல்பித்து எழுதியதில்லை, அவரவர்கள் நியமித்து எழுதியது தான். அந்தந்தப் பெருமாள் தேஶிகன் மூலமாக உண்டாக்கினார் என்பது தான்.
ஸ்வாமி தேஶிகன் ஆஞ்சநேயரைக் குறித்து ஶ்லோகங்கள் சாதித்திருக்கிறார். சங்கல்ப சூர்யோதயத்தில் ஶ்லோகங்கள் இருக்கின்றன. அதேபோல் கந்தமாதன பர்வதத்தில் ஆஞ்சநேயர் இருப்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய திருவடியை போலே சிறிய திருவடியையும் தாராளமாகச் சேவிக்கலாம். அதில் ஆஞ்சநேயருக்கு ப்ரதிஷ்டை எப்படி நடந்திருக்கின்றது என்பது தான் முக்கியமான விஷயம். ஆஞ்சநேயரின் த்யானம், ஶ்லோகங்களைச் சொல்வது எல்லாம் இராமாயணத்தின் போது நமக்கு உண்டு. ப்ரதிஷ்டையின் போது பாஞ்சராத்ர ஆகமத்திலோ அல்லது வைகானச ஆகமத்திலோ ப்ரதிஷ்டை பண்ணப்பட்டிருந்தால் அது பக்த ப்ரதிஷ்டை என்கின்ற ரீதியில் வரும். அதாவது ஸ்ரீராமனுடைய பக்தன் என்கின்ற முறையில் ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் சேவிக்கலாம். ருத்ரனுடைய அம்சமாக ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் அங்கு சேவிக்க முடியாது.
அதனால் பெரியோர்கள் பெருமாள் கோவில்களில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர், ராமருடன் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் இவர்களை தான் சேவிப்பது வழக்கம். மற்றபடி தனியாக இருக்கும் ஆஞ்சநேயர் எந்த ரீதியில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் என்பது தெரியாததனால் சேவிப்பதை அவர்கள் ஆதரிப்பது கிடையாது. மற்றபடி அவரிடம் பக்தியோடு இருந்துகொண்டு அவரின் ஶ்லோகங்களை அவசியம் சேவிக்க வேண்டும்.