ஏகாதசி வ்ரதம் நிர்ஜலமாக இருப்பது உத்தமகல்பம். அப்படியிருக்க முடியாதவர்கள் ஏதேனும் நீராகாரமோ அல்லது பழங்களோ சாப்பிடலாம். அதுவும் முடியாதவர்கள், ஏதாவது பலகாரம் பண்ணலாம். ஆனால் நிச்சயமாக முழு அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.
மறுநாள் துவாதசி பாரணை செய்து ஏகாதசி வ்ரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். எம்பெருமானுக்கு திருவாராதனை செய்து, ப்ரசாதங்கள் அம்சை செய்வித்து, பாதுகா ஆராதனம் செய்து விட்டு பெருமாள் தீர்த்தம், ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரித்து விட்டு, துவாதசி பாரணை காலத்தில் பாரணை பண்ண வேண்டும்.
பாரணை என்றால், பரிசேஷம் செய்த பிறகு வெறும் சாதத்தில் நெய்யில் வறுத்த உப்பு சேர்க்காத சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக்கீரை இவற்றை கலந்து இலையில் சாதித்து அவற்றை முதலில் சாப்பிட்டு ஏகாதசி வ்ரதத்தைப் பூர்த்தி செய்வதே பாரணை என்பது.
இவை மூன்றும் பச்சையாக கிடைத்தால் உசிதம். இல்லை என்றால் இவற்றை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளலாம். பச்சையாக கிடைக்காத பக்ஷத்தில், இந்த உலர்ந்த பதார்த்தங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
துவாதசி நாழிகையைப் பார்த்து, அந்தக்காலத்திற்குள் பாரணை முடிப்பது அவசியம்.
ஏகாதசி வ்ரதத்திற்கான சங்கல்பம் முதலியவற்றை பெரியோர்களிடம் உபதேசமாக கேட்டு தெரிந்துக்கொள்ளவும்.