அகல்யாவிற்கு தோஷம் கிடையாது. பெருமாள் அவர்களின் தோஷத்தை நிவ்ருத்தி செய்துவிட்டார் என்று இராமாயணத்தில் ஸ்பஷ்டமாக இருக்கின்றது. ஒருகால் அவர்களுக்கு தோஷம் இருக்கு என்று எண்ணிக்கொண்டிருந்தால், அதை மாற்றிக்கொள்ளவும் அவர்கள் பாபம் செய்தவர்கள் என்று நாம் நினைப்பதே நமக்கு பாபத்தை உண்டாக்கும்.
எப்படிப்பட்ட தோஷத்தைப் பெருமாள் நிவ்ருத்தி செய்திருக்கிறார் என்பதை நாம் உதாஹரணமாக வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும் என ஸ்வாமி தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில் பல இடங்களில் காட்டியுள்ளார்.
அவர்கள் எல்லாரும் தெய்வ ப்ரக்ருத்திகள். நல்ல விஷயங்களை நமக்கெடுத்துக்காட்ட சில சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கும். அதை நல் விஷயத்திற்காக எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
குறிப்புகள்:
தவறு செய்தவர்கள் உயர்ந்த ஸ்தானத்திலும், தவறு செய்யாதவர்கள் தாழ்ந்த ஸ்தானத்திலும் இப்போதும் இருப்பதைக் காண்கின்றோம். அவரவர்க்குரிய பலனையோ, தண்டணையோ அவரவருக்கு அந்தந்த காலத்தில் பகவான் கொடுப்பான் அதற்கு நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
மேலும், மற்றவர்கள் விஷயத்திலும் ஒருவர் செய்த பாபத்திற்கு அவர்கள் அதற்குரியதான சரியான ப்ராயச்சித்தம் செய்துவிட்ட பின்னரும், அவர்களை பாபம்செய்தவர் என நினைத்தலே நமக்கு பாபம் உண்டாகும். ஆக இது போன்ற விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.