பெருமாள் ஏன் இருக்கிறார், இந்த பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்கின்ற கேள்விகளுக்கு இடமேயில்லை. ஏனெனில், ஏதாவது புதிதாக உண்டானால் தானே இந்தக்கேள்வி வரும். பெருமாள் எப்பவுமே இருக்கின்றார் அதேபோல் இந்த ப்ரபஞ்சமும் அப்படியே இருக்கின்றது!
ஸ்ருஷ்டிக்கு முன், ப்ரளய காலத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் ப்ரபஞ்சம் இருந்திருக்கிறது. ஜீவராசிகளும் இருந்திருக்கின்றன. ப்ரளய காலத்தில் ஜீவர்கள் அனைத்தையும், அனுபவிப்பதற்காக பெருமாள் ஸ்ருஷ்டிக்கிறார். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு தாய் நீண்ட நாழிகை தூங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தையை எழுப்பி பால் கொடுப்பது போலே, ஜீவர்களுக்கு ஆகாரம் கொடுப்பதற்காக ஸ்ருஷ்டிக்கின்றார்.
இந்த ஸம்சாரத்தில் கஷ்டப்படுவதை காட்டிலும் ஸ்ரீவைகுண்ட லோகத்தைச் சேர்ந்துவிட்டால், பசி தாகமென ஒன்றும் இல்லாமல் இன்னும் நன்றாக ஆனந்தமாக இருக்கலாம். பெற்றோர்களுடன் இருப்பது போல் பெருமாளுடன் கூட இருக்கலாம். இதைப்புரிய வைப்பதற்காகத்தான் பெருமாள் தானே அவதாரமெடுத்து, தன் விஷயத்தைப் புரியவைத்து தன்னிடம் வரவழைத்துக்கொள்கிறார்.
பெற்றோர்கள் தன குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போலே, பெருமாள் அவருடைய குழந்தைகளாகிய நம்மிடம் இருக்கும் வாத்ஸல்யத்தினால் இவ்வாறு செய்கிறார்.