தேவர்களுக்கெல்லாம் பெருமாள் பலவிதமான கார்யங்களைச் செய்துக்கொடுப்பர். மீனாக்ஷியினுடைய கல்யாணத்திற்குச் சீர் எடுத்து செல்வார், பரமசிவனுடைய அம்பின் நுனியில் அமர்ந்து த்ரிபுர சம்ஹாரம் செய்து கொடுப்பார், தேவேந்திரனுடைய சேனைக்கு உபேந்திரனாக இருந்திருக்கின்றார் . இவை எல்லாம் பெருமாள் தேவர்களுகுக்குப் பண்ணக்கூடிய அனுக்கிரஹம்.
அதே போன்ற அனுக்ரஹங்களை, நமக்கும் நேரடியாக செய்ய எம்பெருமான் காத்துக்கொண்டிருக்கிறார். அதனால் தேவாதி தேவனான எம்பெருமானை, நேரடியாக வழிபட்டாலே போதும். எல்லா நன்மைகளும் நமக்கு கிட்டும்.
அனைத்து தெய்வங்களும் எம்பெருமானையே அடிபணிந்திருப்பதால், தங்களை வழிபடாமல் பெருமாளை வழிபடுகின்றோம் என்று அவர்கள் கோபப்படமாட்டார்கள்.
வேறு தேவதாந்திரங்களைச் சேவிக்காமல் இருப்பது அவசியமும் கூட. ஏனென்றால் அதுவே பதிவ்ரதா தர்மும் ஆகிறது. எம்பெருமான் ஒருவன்தான் நமக்குப் பதி. அவனைக் கைப்பிடித்த பின், வேறு எவரையும் சேவிப்பது வழக்கத்தில் இல்லை .
வரலக்ஷ்மி நோன்பு ஸ்ரீவைஷ்ணவர்கள் கொண்டாடுவதில்லை என்பது மரபு. மஹாலக்ஷ்மி நாம் வழிப்படும் தேவதையாக இருந்தும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுஷ்டானத்தில் இல்லாததால் அதைப் பின்பற்றுவதில்லை.

