ஆராதனம் தர்ப்பணம் முதலானவை பற்றிய அடியேனுடைய கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளியில் உள்ள ஒரு திருநாமம் ஸ்ரீ பில்வ நிலயாய நம: என்பது. வில்வம் (பில்வம்) என்கிற புனித வ்ருக்ஷம் தாயாருடன் தொடர்புடையது. அப்படி இருக்க ஏன் பொதுவாக வில்வத்தைச் சிவபெருமானுக்கே ஸமர்ப்பிக்கிறார்கள். ஏன் பெருமாளுக்கு ஸமர்ப்பிப்பதில்லை? மேலும் திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தனுர் மாதத்தில் வில்வ இலையைச் ஸமர்ப்பிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏன் அவ்வாறு தனுர் மாதத்தில் மட்டும் ஸமர்ப்பிக்கிறார்கள்? ஆங்கில நாட்காட்டியின் படி நள்ளிரவுக்குப் பிறகு மறுநாள் பிறக்கிறது. அவ்வாறு இருக்க சூர்ய உதயத்திற்கு முன் செய்யப்படும் தனுர் மாத ஆராதனை சங்கல்பத்தின்பொழுது நாளை (உம்- பானு வாஸர) எவ்வாறு குறிப்பிட வேண்டும்? ஆங்கில நாட்காட்டி படியான அன்றைய நாளா அல்லது முதல் நாளா? சூர்ய உதயத்திற்கு முன் தளிகை அமுது செய்யப்படுவதால் நாம் ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி என்று கூற வேண்டுமா அல்லது ருதம் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி என்று கூற வேண்டுமா ? தன்வந்திரி பெருமாளுடன் தொடர்புடைய நட்சத்திரம் எது? எந்த திதி அல்லது நட்சத்திரத்தில் நாம் தன்வந்திரி பெருமாளுக்கு ஆராதனம் செய்ய வேண்டும்? 27 யோகங்களில் ஒன்றான வ்யதீபாத யோகம் தீங்கானது என்றும் தேவ, பித்ரு காரியங்களுக்கு மட்டும் உகந்தது என்றும் கூறப்படுகிறது. அதனால் அந்த வ்யதீபாத காலத்தில் ஏதேனும் குறிப்பிட்ட பெருமாள் ஆராதனை/ ஜபம்/ தானம் செய்ய வேண்டுமா? கீழ்வரும் ஸ்லோகத்தின் படி வ்யதீபாத காலத்திற்கும், விஷ்ணு சக்ர ஸ்வரூபாய என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன? வ்யதீபாத மஹாஸத்வ சர்வபாபப்ரணாஶந ஸஹஸ்ரபாஹோ விஶ்வாத்மந் க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே । வ்யதீபாத நமஸ்தேஸ்து நமஸ்தே விஶ்வமங்கள விஷ்ணுசக்ரஸ்வரூபாய நமஸ்தே திவ்யதேஜஸே ।। அமெரிக்காவில் இந்த வருடம் மகர ரவி மாலை 4.15 மணிக்கு பிறந்தது. அடியேனால் அதுவரை பட்டினி இருந்து மாலை 4.15ற்கு தர்ப்பணம் செய்ய இயலவில்லை. அதனால் அடுத்த நாள் காலை தர்ப்பணம் செய்து விட்டு போஜனம் செய்தேன். இவ்வாறு மாலையில் மகர ரவி பிறக்கும் பொழுது தர்ப்பணம் செய்வதற்கு முன்பு போஜனம் செய்யலாமா அல்லது அடுத்த நாள் காலையில் போஜனம் செய்வதற்கு முன் தர்ப்பணம் செய்யலாமா எது சரி?

1. வில்வத்தைப் பெருமாளுக்கும் ஸமர்ப்பிக்கலாம். தப்பில்லை என்பது தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் தாயாருக்கும் பில்வ நிலயாயை நம: என்று இருக்கின்றது. அதனால் பெருமாளுக்குச் ஸமர்ப்பிக்கலாம். சிவனுக்கு அது விசேஷம் என்கின்றபடியினால் அவருக்குச் ஸமர்ப்பிக்கிறார்கள் அவ்வளவு தான்.
மேலும் திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தனுர் மாதத்தில் வில்வ இலையை ஸமர்ப்பிக்கிறார்கள் என்று கேள்வியிலேயே இருக்கின்றது. அதனால் ஸமர்ப்பிக்கலாம் என்று ஏற்படுகிறது. ஏன் தனுர் மாதத்தில் மட்டும் ஸமர்ப்பிக்கிறார்கள் என்பதற்கு விசேஷமான காரணம் என்ன என்று கேட்டுப்பார்க்கவேண்டும். எதுவாக இருந்தாலும் ஸமர்ப்பிக்கலாம் என்று ஆகிறது. அதனால் தனுர் மாதத்தில் ஸமர்ப்பிக்கலாம் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம்.
2. தனுர் மாதத்தில் பொதுவாக பொங்கல் ஸமர்ப்பிப்பதுதான் வழக்கம். அது உப்புச் சேர்த்த பதார்த்தமானதால் அதற்குப் பரிசேஶணம் கிடையாது. பரிசேஶணம் இல்லாமல் சோஶன தாஹன ப்லாவனம் பண்ணி சுத்தி செய்து ஸமர்ப்பிக்க வேண்டும்.
3. ஸ்ரீரங்கம் கோவிலில் மிகவும் ப்ராசீனமான் தன்வந்த்ரி ஸந்நிதி உள்ளது. அந்தச் சந்நிதியில் ஐப்பசி மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் தன்வந்த்ரி ஜெயந்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதையே செய்யலாம்.
4. வ்யதீபாதயோகத்தில் குறிப்பிட்ட ஆராதனை, ஜபம், தானம் போன்றவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் யாரும் செய்யவேண்டியதில்லை. அதில் காம்யமான கர்மம் நிறைய இருக்கிறது. காம்யங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
5. வ்யதீபாத மஹாஸத்வ என்று ஆரம்பிக்கும் ஶ்லோகம் எங்கிருக்கிறது என்று அடியேனுக்குத் தெரியவில்லை. வ்யதீபாத என்பதற்கு பல அர்த்தம் உண்டு. வ்யதீபாத என்றிருந்தால் “எல்லாவாற்றையும் கடந்து நிற்பவன் என்று வரும்”. இவ்வர்த்தத்தில் இது வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. வ்யதீபாத1 அல்லது வய்தீபாத3 எது என்று சொன்னால் ஶ்லோகத்தைப் பற்றி சொல்ல வசதியாக இருக்கும். அடியேனும் பலரிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
6. பொதுவாக தர்ப்பணம் செய்வதற்கு முன் போஜனம் செய்யக்கூடாது. என்றைக்கு மாசப்பிறப்பு வருகிறதோ அன்றைக்குதான் தர்ப்பணம் செய்யவேண்டும் மறுநாள் புண்யகாலம் கிடையாது. அதனாலே மாசப்பிறப்பு வரும் நாளன்று அடியோடு முடியவேயில்லை என்றால், தர்ப்பணத்தைச் சற்று முன்னால் பண்ணிவிட்டு சாப்பிடலாம். இதுவும் மிகவும் முடியாதவர்களுத்தான். மற்றபடி கேள்வியில் கேட்டிருக்கும்படி மறுநாள் பண்ணுவதோ அல்லது சாப்பிட்டுவிட்டுத் தர்ப்பணம் பண்ணுவதோ அடியோடு கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top