உடல் உறுப்பு தானம் பற்றி ஶாஸ்திரத்தில் எதுவும் பெரிதாகச் சொல்லவில்லை. ஏனென்றால் அந்தக் காலத்தில் அது கிடையாது. இப்பொழுதுதான் இப்படி ஒரு விஷயம் வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தெரியாதானபடியினால் ஶாஸ்திரம் அதை ஆதரிக்கிறது என்று சொல்ல முடியாது. ஶாஸ்திரம் ஆதரிக்காத விஷயத்தை செய்வதற்கு பெரியோர்கள் தயங்குவார்கள். ஶாஸ்திரத்தில் சொல்லியிருந்தால்தான் செய்வார்கள். சொல்லாத விஷயத்தை ஏற்றுக் கொள்வதற்கு மகான்கள் தயங்குவார்கள். அந்த ரீதியில் வருகின்ற தயக்கம் நமக்கும் வேண்டும், இருக்க வேண்டியதும்தான். ஏனென்றால் பகவான் நமக்கு கொடுத்த உடல் உறுப்புகளை இன்னொருவருக்கு கொடுப்பதற்கு எந்த அளவிற்கு நமக்கு உரிமை இருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
கடைசியில் ஶரீரத்தைத் தானம் பண்ணும்போது அது ஒரு ஹோமம் போல் கணக்கு. அதற்கும் மந்திரங்களெல்லாம் உண்டு. மந்திரங்கள் சொல்லி அக்னியில் ஸமர்பிப்பதாகத்தான் கணக்கு. ஆகையால் அதற்கு எந்தக் குறைவுமில்லாமல் முழு த்ரவ்யமாக அதை ஸமர்பிப்பது நல்லது என்கிற ரீதியில் ஶாஸ்த்ரம் கூறியிருக்கிறது.