விவாஹ ப்ரயோகத்தில் ஸ்தாலிபாகம் சேஷ ஹோமம் இவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. விவாஹத்தில் எப்படியானால், முதலில் லாஜ ஹோமம், அதற்கு முன் சப்தபதி அப்படியெல்லாம் சொல்லி இருக்கிறதோ அது மாதிரியாக ஸ்தாலிபாகம் சேஷ ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது. விவாஹத்தினுடைய ஒரு ப்ரக்ரியையில் இது உள்ளடங்கியது. அதனால் எதற்காக பண்ணுகிறார்கள் என்றால் ஶாஸ்திரம் சொல்வதனால் பண்ணுகிறார்கள். இதில் வரும் இந்த ஸ்தாலிபாகம் என்பது பின்னால் வரப்போகும் ஸ்தாலிபகங்களுக்கு எல்லாம் ஒரு ஆரம்பம். அதாவது க்ருஹஸ்தனாக இருக்கின்றவன் நித்யம் ஔபாசனம் பண்ண வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்தாலிபாகம் பண்ண வேண்டும். அதை ஆரம்பிக்கும் ஸ்தாலிபாகம் இது. அதனால் இது மிகவும் விசேஷம்.
கல்யாணம் என்பது ஐந்து நாட்கள் நடக்கும் பொழுது அதில் நான்கு நாட்கள் நித்ய ஔபாசனம் எல்லாம் விடாமல் பண்ணிக்கொண்டிர்ப்பார்கள். அதன்பின் கடைசியாக ஒரு ஹோமம் பண்ணுவது பாக்கி இருக்கும். அதற்குத்தான் சேஷ ஹோமம் என்று பெயர். அது அந்த விவாஹ ப்ரக்ரியாவை, சடங்கை முடிப்பதற்காக, ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் பண்ணி அது முடிப்பதாக வரும். அதற்கு சேஷ ஹோமம் என்று பெயர். மீதி இருப்பதை செய்து விவாஹ ப்ரக்ரியயை முடித்துக் கொள்கிறோம் என்று அர்த்தம்.