மாதவிடாய் காலத்தில் ஶரீர ரீதியில் ஒரு நிம்மதியின்மை, கஷ்டங்கள், மனதளவிலும் துக்கங்கள், வேதனைகள் இருக்கின்றபடியினால் ஒரு ஓய்வு கொடுப்பதற்காக விலகி இருப்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் முன்புபோல் அத்தகைய வேலைப்பளு கிடையாது என்பது வாஸ்தவம் தான். இப்பொழுது போல் முன்பு இத்தனை கருவிகள் கிடையாது. அதனால் வேலைப்பளு அதிகமாக இருந்ததனால் ஓய்வு தேவையாக இருந்தது. இப்பொழுதும் அலுவலகத்திற்கு வேலைக்கு, மற்றும் வெளியில் செல்வது போன்ற காரியங்களை எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.
அகத்துக்குள் வரும்பொழுது அந்த ஓய்வை கடைபிடிப்பது மாத்திரம் அல்லாமல், மனதளவிலும், உடலளவிலும் ஒரு அசுத்தி இருக்கின்றது. சிலருக்கு மனதளவிலும் ஒரு பாதிப்பு அதாவது எதிர்மறையான எண்ணங்கள் இவை எல்லாம் இருக்கும். நம் அகம் என்பது பெருமாள் ஏளியிருக்கும் இடம், பெருமாள் திருவாராதனம் நடக்கும் இடம், எம்பெருமானுக்குத் தளிகை பண்ணும் இடம், சாப்பிடும் இடம் என்று எல்லாமே பெருமாளுடன் சம்பந்தப்பட்டதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தானே நித்யமும் வாசல்தெளித்து கோலம் போடுவது எல்லாம் செய்கின்றோம். அதனால் பெருமாளவில் சம்பந்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள்.பெருமாள் இருக்கும் இடம் சுத்தியாக இருக்க வேண்டும் என்று ஒரு சுத்திக்காகவும் மற்றும் ஓய்வுக்காகவும் இரண்டிற்காகவும் சொல்லி இருக்கிறார்கள்.

